புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதி முத்துக்காடு ஊராட்சியில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் தற்போது சிபிசிஐடி க்கு விசாரணை மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று இறையூரில் உள்ள அய்யனார் கோவிலில் சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கயல்விழி மற்றும் சின்னத்துரை எம்.எல்.ஏ, திமுக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்ததும் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி பேசும் போது, 'சமத்துவம், சம உரிமைக்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த சமத்துவ பொங்கல் வழிபாடு அய்யனார் கோவிலில் நடத்தி இருக்கிறோம். குடிநீரில் மனித கழிவு கலந்த சம்பவத்தில் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது'' என்றார்.
அப்பொழுது 'தண்ணீர் தொட்டி குடியிருப்பு பகுதியில் இருப்பதால் வெளி ஆட்கள் உள்ளே போக முடியாது என்கிறார்களே? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு
'யூகத்தின் அடிப்படையில் திசைதிருப்பி விசாரணையை திசை திருப்ப வேண்டாம்'' என்றார்.
'வன்கொடுமை, இரட்டை குவளை முறை அதிகம் உள்ளதே?' என்ற கேள்விக்கு ''இரட்டை குவளை முறை எங்கேயும் இல்லை. அனைவரும்
சகோதர சகோதரிகளாக தான் உள்ளனர். இரட்டை குவளை முறை இருப்பதாக நாம தான் கிளப்பிவிடுகிறோம்'' என்றார்.
'இறையூரில் தாசில்தார் புகார் கொடுத்து வழக்குப் பதிவாகி கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ளனரே?' என்ற கேள்விக்கு,
''விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
'சமத்துவப் பொங்கலில் ஆண்கள் மட்டுமே வந்துள்ளனரே?' என்ற கேள்விக்கு,
''ஆண்கள் தான் உள்ளே வருவது வழக்கமாக உள்ளதால் பெண்கள் வெளியிலிருந்து வழிபட்டனர். அனைத்து தரப்பினரும் வந்துள்ளனர்'' என்றார்.
'விசாரணை ஒரு தரப்பாக நடப்பதாக சொல்கிறார்களே?' என்ற கேள்விக்கு,
''நியாயமான விசாரணைக்காகத் தான் சிபிசிஐடி விசாரணை வருகிறது. அதுவும் தமிழ்நாடு காவல்துறை தான்'' என்றார்.
பேட்டி முடிந்ததும் அமைச்சர்கள், தங்களை சந்திக்க வருவார்கள் என காத்திருந்த பெண்கள் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் சென்றவுடன் தங்களை சந்திக்க அமைச்சர்கள் வரவில்லை என அங்கு நின்ற வருவாய்த்துறை மற்றும் போலீசாரிடம் பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.