கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு இன்று (02.10.2024) நடைபெற்றது. தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய அளவில் மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டினை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த மாநாட்டில் அக்கட்சியின் கொடியை திருமாவளவன் ஏற்றி வைத்தார். மேலும் 13 தீர்மானங்களை வாசித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க நடைபெற்ற மது ஒழிப்பு மாநாட்டில் விசிக தொண்டர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. பெண் காவலரை கீழே தொண்டர்கள் தள்ளிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் சிலர் அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட கட் அவுட்டுகள் மீது பாதுகாப்பின்றி ஏறி கொடிகளை கையில் ஏந்தியபடி இருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேடையில் இருந்த திருமாவளவனே மைக்கில் எச்சரிக்கும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டது,'மாநாட்டை சீரழிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. அமைதியாக இருங்கள் என அங்கிருந்தவர்களை திருமாவளவன் மைக்கில் எச்சரித்தார். அதேபோல கட்அவுட் மேல் ஏறிய தொண்டர்களையும் திருமா எச்சரித்தார். 'கட்அவுட் மேல் ஏறாதீர்கள். தயவு செய்து சொல்வதை கேளுங்கள். நான்கு பேர் செய்வதால் பலபேருக்கு பாதிப்பை உண்டு பண்ணும். நாற்காலி மேலே யாரும் நிற்காதீர்கள்' என எச்சரித்தார். அதேபோல் சில விசிக தொண்டர்கள் மாநாடு நடக்கும் பகுதிக்கு அருகே ஒன்றாக குழுவாக அமர்ந்து மது குடித்ததாகவும் கூறப்படுகிறது.