கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் கிராமம், 64 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரர் பிறந்த ஊர். இந்தக் கிராமத்தில் ஸ்ரீ பக்த ஜனேஸ்வரர் சிவன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், அல்லிகுட்டை எனும் குளம் இருந்துள்ளது. அதனை 10 ஆண்டுகளுக்கு முன்பு சிலர் மணல்களை கொட்டி அதனை மூடி ஆக்கிரமிப்புகள் செய்துள்ளனர். இதைப்பற்றி இந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரில் சென்று முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து, நடிகர் வடிவேலு நடித்த ‘கிணற்றை காணோம்’ என்ற பட பாணியில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், ‘எங்க ஊரு குளம் குட்டை காணாங்க.. தமிழக அரசே; உள்ளாட்சித் துறையே.. கண்டுபிடித்திடு’ என சுவர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.