தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று தமிழகம் முழுவதும் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் மழை பொழிவை வைத்து பள்ளி தலைமையாசிரியர்களே விடுமுறை அறிவித்தல் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் வங்கக்கடலில் நிலவும் இரண்டு வளிமண்டல சுழற்சியின் தாக்கத்தால் தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.