ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அமைச்சரின் அவசர சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
காவிரி டெல்டா பகுதிகளிலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி பாயும் நெடுவாசல் கிராமத்திலும் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த 2017 ம் ஆண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. அதன் பிறகு போராட்டங்கள் வெடித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். ஆனால் தற்போது மீண்டும் அந்த திட்டத்தை செயல்படுத்த வேதாந்தா நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்ட நிலையில் மக்கள் கருத்து கேட்கப்படாமலும், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரும் இதே கருத்துகளை கூறியுள்ளார். அதனால் மீண்டும் தமிழக விவசாயிகள் வெகுண்டெழுந்துள்ளனர்.
இந்தநிலையில்தான் அதிகாரம் படைத்த கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட விவசாயிகளுக்கு கைஃபா இளைஞர் அமைப்பினரும், பி.ஆர். பாண்டியனும் வலியுறுத்தி இருந்தனர்.
அதன் படி இன்று நடந்த கிராம சபைக் கூட்டங்களில் நெடுவாசல், கொத்தமங்கலம், செரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும், தஞ்சை மாவட்டத்தில் கரம்பக்காடு, செருவாவிடுதி உள்ளிட்ட பல கிராமங்களிலும் அதே போல திருவாரூர் மாவட்ட கிராமங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானங்கள் அனைத்தும் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்க கைஃபா இளைஞர் அமைப்பினர் அடுத்தகட்ட பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையும் மீறி திட்டத்தை செயல்படுத்த நினைத்தால் மிகப் பெரிய போராட்டங்களில் இறங்குவோம் என்கிறார்கள் விவசாயிகளும், இளைஞர்களும்.