தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் கடந்த 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டினார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட்டதோடு விஜய் தன்னுடைய கொள்கை மற்றும் அரசியல் எதிரிகள் யார் என்பது குறித்துப் பேசி இருந்தார். விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு தலைவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராணிப்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். '2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாமக கூட்டணி ஆட்சி அமைக்குமா?' என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, ''நான் தொடர்ந்து சொல்லி வருவது 2026 ல் கூட்டணி ஆட்சி நடக்கும். அந்த கூட்டணி ஆட்சியில் பாமக இருக்கும். 2026 தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது என்னென்ன சூழல் இருக்கிறதோ அதைப் பொறுத்து நிச்சயமாக எல்லா கட்சிகளும் அடங்கிய ஒரு கூட்டணி இருக்கும்'' என்றார்.
'விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி இருக்கிறார். அவர் கூட்டணிக்கு அழைத்தால் நீங்கள் செல்ல தயாரா? அவருடன் கூட்டணி வைக்க தயாரா?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி, ''அதெல்லாம் நாங்கள் தேர்தல் வரும் நேரத்தில் முடிவு செய்வோம். கோவை நிகழ்ச்சியில் செந்தில் பாலாஜி தடைகளை தாண்டி கம்பேக் கொடுத்துள்ளார் என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் இதே முதல்வர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் பாலாஜியை மிகப்பெரிய ஊழல்வாதி என சொன்னார். இந்த ஆறு ஆண்டுகளில் என்ன மாறிவிட்டது? கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். இப்போது பிணையில் வந்திருக்கிறார். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்கள் கட்சி பலமாக இருக்கிறது. இளைஞர்கள் பலமாக இருக்கிறார்கள். நாங்கள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. எங்களை பொறுத்தவரை யார் அரசியலுக்கு வந்தாலும் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஒரு துளியும் பயம் கிடையாது. எங்களுடைய அரசியல் நோக்கம் வேறு; எங்களுடைய அரசியல் கொள்கைகள் வேறு. தமிழ்நாட்டில் வித்தியாசமான கட்சி பாமக கட்சி. வித்தியாசமான கொள்கைகள், கோட்பாடுகள், போராட்டங்கள், அணுகுமுறைகள், அறிக்கைகள், தலைவர்கள் எல்லாமே வித்தியாசமானவர்கள் என்பதில் எங்களுக்கு தனி இடம் இருக்கிறது'' என்றார்.