
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டமாக இருந்த போது, உளுந்தூர்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அஜீஸ் நகர் பகுதியில் ஒரு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. கடலூர் மாவட்ட எல்லையிலுள்ள வேப்பூரிலிருந்து உளுந்தூர்பேட்டை வரை சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்தன இந்த விபத்துக்களின் போது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அந்தப் புறக்காவல் நிலையம் ஏற்படுத்தப்பட்டது.
பிறகு அந்த காவல் நிலையத்திற்கு எடைக்கல் காவல் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்து அதை முழுநேர காவல் நிலையமாக செயல்பட வைத்தனர். இந்த காவல் நிலைய அதிகாரியாக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் நியமிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இந்த எடைக்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆக இருந்து கண்காணிக்க அரசு உத்தரவிட்டு அதன்படி நடந்துவந்தது.
அதன்படி செயல்பட்டுவந்த எடைக்கல் காவல் நிலையம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஆசனூர் பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், ஆசனூர் காவல் நிலையம் இருக்கும் இடத்திற்கும் எடைக்கல் கிராமத்திற்கும் குமார் 10 கிலோமீட்டர் தூரம் இடைவெளி இருக்கும் நிலையில் ஆசனூர் எல்லையில் அமைந்துள்ள காவல் நிலையத்தின் பெயரை மாற்றி ஆசனூர் காவல் நிலையம் என்று வைக்க வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் ஆதரவோடு காவல்துறை உயரதிகாரிகளுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பி வருகிறார்கள்.
இது குறித்து பகுதி சமூக ஆர்வலர்கள் குறிப்பிடும்போது, ஆசனூர் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அது சம்பந்தமான காவல்துறை ஆவணங்களில் ஆசனூர் எனக் குறிப்பிடுகின்றனர். காவல் நிலைய பெயரை குறிப்பிடும் போது எடைக்கல் இன்று குறிப்பிடுகின்றனர். இதனால் விபத்து சம்பந்தமாக ஆவணங்களை பெறுபவர்கள் குழப்பம் அடைகிறார்கள். மேலும் இதுபோன்று ஆவணங்கள் விபத்து காப்பீடு பெறும் போது மேலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவே காவல் நிலையம் ஆதனூரில் அமைக்கப்பட்ட பிறகு அந்த காவல் நிலையத்திற்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்கின்றனர்.