தமிழகத்தில் இந்த ஆண்டு மட்டும் குறைவான மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதில் தமிழக எல்லையோரத்தில் உள்ள மாவட்டங்களில் அருகில் உள்ள பிற மாநில மொழி பள்ளிகளை தொடங்கி நடத்தி வருகின்றன. குறிப்பாக திருவள்ளுர், வேலூரில் அரக்கோணம், சோளிங்கர், குடியாத்தம் பகுதிகளில் ஆந்திரா மாநில எல்லையோரம் உள்ள பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் தெலுங்கு மொழிப்பாடம் உள்ள பள்ளிகள் அதிக அளவில் இயங்கி வருகிறது.
அதேபோல், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, விஷாரம், வேலூர், ஆற்காடு போன்ற பகுதிகளில் இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் பகுதிகளில் உருது பள்ளிகள் உள்ளன. இங்கு உருது பாடம் நடத்தப்படும் பள்ளிகள் உள்ளன. இதில் உருதுமொழி வழி பள்ளிகளையும், தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசாங்கம் மூடி வருகிறது என்கிறார்கள் சிறுபான்மையின இயக்கத்தினர்.
தமிழக பள்ளி கல்வித்துறையின் இந்த செயலை கண்டித்து, வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நியுடவுன் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக உருதுமொழி வழி பள்ளிகளை பாதுகாக்க கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.