முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் கடந்த 28 ஆண்டுகளை கடந்து 29வது ஆண்டாக சிறையில் தண்டனை கைதிகளாக உள்ளவர் முருகன். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் உட்பட 7 பேரும், 28 ஆண்டுகளாக சிறையில் உள்ளோம். எங்களின் மனநிலையை கருத்தில் கொண்டு எங்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கவர்னருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி தமிழ அரசு அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்ப, அதனை அவர் முடியாது என மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனின் அறையில் இருந்து ஆன்ட்ராய்ட் செல்போன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிறைத்துறை சார்பாக பாகாயம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
முருகன் சிறை விதிகளை மீறினார் என்பதால் அவர் சிறையில் வழங்கப்படும் சலுகைகள் நிறுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி 15 தினங்களுக்கு ஒருமுறை வேலூர் பெண்கள் சிறையில் உள்ள தனது மனைவி நளினியை சந்திக்க நீதிமன்றம் வழியாக அனுமதி பெற்று சந்தித்து 30 நிமிடம் பேசி வருகிறார்கள். இனி இந்த சந்திப்பு நடைபெறாது. சிறையில் தனியாக சமைத்து உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது அது ரத்து செய்யப்படும். அதேபோல் அவர் தனிமை சிறைக்கு மாற்றப்படுவார். அதைவிட முக்கியமானது, தன் மகள் திருமண பணிகள் செய்ய தனதுக்கு பரோல் வேண்டும் எனக்கேட்டு அதனை சிறைத்துறை நிராகரித்து தற்போது உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். தற்போது சிறை விதிகளை மீறினார் என்பதால் பரோல் வழங்க சிறைத்துறை மறுக்கும் என்றும் கூறப்படுகிறது.
2017ல் இதேபோல் முருகன் அறையில் இருந்து செல்போன் எடுத்தனர் சிறைத்துறை காவலர்கள். அப்போது முருகனுக்கான சலுகைகள் ரத்து செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் வழக்கில் இருந்து விடுதலையானார் முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.