![Vellore hill village, marriages are stopped because of nattamai](http://image.nakkheeran.in/cdn/farfuture/ihtfpUT1ZYgANJ5djS2sFPGsHJutz4rsuCGcDAWkd4s/1689140791/sites/default/files/inline-images/1000_126.jpg)
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு மலை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த மலைக் கிராமங்களில் நடக்கும் சுபநிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி, கோயில் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும், ஊரான் (நாட்டாமை) ஆக இருப்பவர் முடிவு செய்து தேதி கூறிய பிறகு தான் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதேபோல், ஊரான் வந்து தாலி எடுத்துக் கொடுத்த பிறகே திருமணம் நடக்கும் வழக்கம் இருக்கிறது.
இந்நிலையில், வெள்ளக்கல் மலைக்கு ஊரானாக சேகர் என்ற சங்கர்(39) இருந்து வந்தார். இவரது அண்ணன் மகன் வசந்த் என்பவருக்கும், ஜமுனா முத்தூர் அருகே உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை வெள்ளக்கல் மலையில் உள்ள மணமகன் வீட்டில் திருணம் நடைபெற இருந்தது. எனவே, இந்தத் திருமணத்தில் தாலி எடுப்பதற்காக கடந்த 5 ஆம் தேதி ஊரான் சேகர் மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஊசூருக்கு வந்தனர்.
பின்னர் சிவநாதபுரம் மலையடிவாரம் வரும்போது, அங்கிருந்த வேலூர் எஸ்பி தனிப்படை போலீசார் சாராயம் விற்பது தொடர்பாக சேகரை மடக்கி விசாரணைக்காக அரியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், சாராய வழக்குப்பதிவு செய்து சேகரை கைது செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் காவல் நிலையத்திற்குச் சென்று சேகரை விடுவிக்குமாறு போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவரை விடுவிக்க போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த கிராமத்தில் ஊரான் கைது செய்யப்பட்டு திருமணம் நிறுத்தப்பட்ட நிகழ்வு இதுவே முதல்முறையென மலைவாழ் மக்கள் கூறுகின்றனர். மணமகனுக்கு சித்தப்பாவும் அந்த கிராமத்திற்கு ஊரானாகவும் இருந்து தாலி எடுத்துக் கொடுக்க வேண்டியவர் கைது செய்யப்பட்டதால் திருமணம் நிறுத்தப்பட்டது அந்த கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அத்தியூர் மலைக் கிராமங்களைப் பொறுத்தவரையில் ஊரானாக நியமிக்கப்படுபவர் தாலி எடுத்துக் கொடுத்த பிறகே திருமண நிகழ்வு நடந்து வருகிறது. தற்போது, வெள்ளக்கல் மலையின் ஊரான் சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதால், அந்த பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளார். மேலும், வேறு ஒருவர் புதிதாக ஊரானாக நியமிக்கப்படும் வரை அந்த கிராமத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்காது.
தற்போது நிறுத்தப்பட்ட இவர்களது திருமணமும் புதிய நாட்டாமை வரும் வரை நடத்தமாட்டார்கள். ஊரானாக மீண்டும் இவரோ அல்லது வேறு ஒருவரோ வருவது என்றால் 18 நாட்டாமைகள் முடிவு செய்து அறிவிக்கப்பட்ட பிறகு தான் ஊரானாகச் செயல்பட முடியும் என மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.