வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்த ஷீ கம்பெனி தொழிலாளி 45 வயதான சங்கர். அவரது அக்கா பானுமதி மற்றும் பானுமதியின் பேரன் 11 வயதான நித்திஷ் ஆகியோர் மே 5ந்தேதி காலை சென்னைக்கு செல்வதற்காக ஆம்பூர் ரயில் நிலையம் செல்வதற்காக ஆம்பூர் பழைய பேட்டையில் இருந்து ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டுள்ளனர்.
இரயில் நிலையத்துக்கு சீக்கிரம் செல்ல வழக்கமான பாதையை விட்டுவிட்டு ட்ராக்கை கடந்து செல்ல முடிவு செய்து ட்ராக்கை கடந்து செல்லத்துவங்கினர். அப்போது, மங்களூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற மங்களூர் விரைவு ரயில் இவர்கள் மீது மோதியதில் சங்கர், பானுமதி, நித்திஷ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.
இதுப்பற்றிய தகவல் ஜோலார்பேட்டையில் உள்ள ரயில்வே காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து வந்த ரயில்வே காவல்துறையினர், இறந்தவர்களின் பிரேதத்தை பறிமுதல் செய்து பிரேதபரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரின் அவசரத்தாலும், கவனக்குறைவாலும் ரயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது.