144 ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சித்தர்காடு அடுத்த சீகராஜபுரம் பகுதி அருகே சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த சில இளைஞ்ர்களைப் போலீசார் மடக்கினர்.
போலீசாரைக் கண்ட அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். இதில் ஜெயபிரகாஷ் என்பவர் தப்பி ஓடிவிட வாசன், யுவராஜ், அரவிந்த் ஆகியோர் பிடிபட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரணை செய்ததில் இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இருசக்கர வாகனம் திருட்டு, செயின் பறிப்பில் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
தொடர் விசாரணையில் வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை ஆற்றங்கரையோரம் சென்னை பகுதியைச் சேர்ந்த ஆசிக் அஹமது மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யா, நவீன் ஆகிய மூன்றுபேரை 8 பேர் கொண்ட கும்பல் அடித்து கொன்று ஒரே குழியில் புதைத்திருப்பதாக வாக்குமூலம் அளித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
கொலை நடைபெற்ற பகுதி வேலூர் மாவட்டம் என்பதால் கடந்த மாதம் 16-ம் தேதி லாலாபேட்டை பகுதியில் வள்ளி என்ற பெண்ணிடம் மூன்றரை சவரன் செயின் பறிப்பில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக இவர்கள் மூவரையும் சிப்காட் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை சம்பந்தமான தகவல்களைத் திருவலம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதன் அடிப்படையில் காட்பாடி டி.எஸ்.பி துரைபாண்டி தலைமையில் விசாரணை மேற்கொண்டனர் திருவலம் போலீசார். விசாரணையில், திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர் தலைமையில் சூர்யா, சதீஷ் , சாரு ஆகியோர் மற்றும் அதேபோல் ஆசிப் அகமத், சூர்யா, நவீன் ஆகியோர் இரு குழுக்களாக இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இளங்கோ குழுவினரை அடிக்கடி காவல்துறையினர் பிடித்துவிட ஆசிக் அஹமது தான் தன்னை காவல்துறையிடம் காட்டிக் கொடுப்பதாக நினைத்து இளங்கோ அவர்களைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தான்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு ஏழு நபர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இளங்கோ தனது சிறை நண்பரான ஜெயபிரகாஷ்சிடம் இவர்களைத் தீர்த்துக்கட்ட உதவி கோரியுள்ளார். அதன் பெயரில் ஜெயபிரகாஷ் பயமுறுத்துவதாகக் கூறி அவர்களை சிப்காட் சீக்கராஜபுரம் பகுதிக்கு அழைத்து வரச் சொல்லியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு அனைவரும் இருசக்கர வாகனத்தில் ஆற்காடு அடுத்த சீக்கராஜபுரத்துக்கு வந்துள்ளனர். அவர்களை மது விருந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி வேலூர் மாவட்டம் திருவலம் பொன்னை ஆற்றங்கரை அருகே உள்ள பனந்தோப்பு என்னும் காப்புக்காட்டில் மது விருந்து வைத்து அடித்து கொலை செய்து ஒரே குழியில் மூன்று பேரையும் புதைத்தது உறுதியானது.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டவர்களின் பகுதியில் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் மூன்று பேருமே கடந்த 10 மாதமாகக் காணவில்லை என்பது உறுதியானது. சூர்யா காணவில்லை என அவரது மனைவி விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பது தெரிய வந்தது.
திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ், சூர்யாவை கைது செய்து கொலை நடந்துயிருப்பதை உறுதி செய்தனர். கொலையில் சம்மந்தப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோ, சாரு ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர் .
இதனையடுத்து காட்பாடி சரக டி.எஸ்.பி துரைபாண்டி, காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ், காட்பாடி தாசில்தார் பாலமுருகன், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், வனத்துறையினர் முன்னிலையில், சதீஷ், சூர்யா ஆகியோர் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்ட அந்தப் பகுதியில் தோண்டும் பணி நடைபெற்றது. சில அடிகள் தோன்றியதுமே ஆசிப் அகமது, சூர்யா, நவீன் ஆகியோரது சடலம் எலும்பு கூடுகளாகக் கைப்பற்றப்பட்டது. அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை செய்து உடல் பாகங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருட்டுத் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக எட்டு பேர் சேர்ந்து மூன்று பேரை அடித்து கொன்று ஒரே குழியில் புதைத்த விவகாரம் பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.