Skip to main content

ஒருவர்கூட இல்லாத அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்!!! வேதாரண்யம் அவலம்

Published on 13/10/2018 | Edited on 13/10/2018
vedharanyam


 

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் கடந்த  2015ம்  ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஒருவர் கூட படிக்கவில்லை என்றும் துவங்கப்பட்ட நோக்கம் கேள்விக்குறியாகி வருவதை கண்டும்  சமூக ஆர்வலர்கள் கவலைக் கொள்கிறார்கள்.
 

தமிழகத்தில்  இடைநிலை ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு 2015- ஆம் ஆண்டு, அப்போதைய மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியது. அதன்படி ஒன்றிய அளவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை  தொடங்கி நடத்த திட்டமிடப்பட்டது. முதல்கட்டமாக மாநிலத்தின் 7 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் வேதாரண்யத்திலும் செயல்பட அனுமதிக்கப்பட்டது. தற்காலிகமாக எஸ்.கே. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் தொடங்கபட்டது.


இப்பயிற்சி நிறுவனத்திற்கு முதல்வர், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட 15 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டதோடு, மாணவர் சேர்க்கையை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இரண்டாண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி வழங்கும் இந்த நிறுவனத்தில், ஆண்டுதோறும் 50 மாணவர்களை சேர்த்து பயிற்சி அளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இன்றுவரை ஒருவர்கூட படிக்கவில்லை என்பது தான் கவலைக்கான காரணமாக இருக்கிறது.
 

பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி  அளிக்க அரசு முன்வந்தபோதிலும், இங்கு சேர்ந்து படிக்க மாணவர்கள் முன்வரவில்லை. ஆரம்பத்தில்  6 பேர் சேருவதற்கு முன்வந்தனர்,  அவர்களும் டி.சி. வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர். 


வேதாரண்யம் நாகை சாலையில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அரசின் கொள்கை முடிவால் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. இந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தால் வேதாரண்யம் பகுதியில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் உருவாகவும், அதன் வாயிலாக அரசுப் பள்ளிகள் தவிர 64 -க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் உருவாகவும் காரணமாக அமைந்தன. மூடப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக இருந்து வந்தது.


மாநில அரசின் கல்விக் கொள்கையின்படி, தமிழகத்தில் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் புற்றீசல்போல் அதிக எண்ணிக்கையில் அதிரடியாக திறக்கப்பட்டன. வேதாரண்யம் பகுதியில் மூன்று தனியார் கல்வியியல் கல்லூரிகளும், நான்கு இடங்களில் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான தனியார் நிறுவனங்களும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இதனால், மற்ற இடங்களை ஒப்பிடும்போது இந்த பகுதியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக  உள்ளது.
 

இந்த சூழலில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு முறை கொண்டுவரப்பட்டதால் ஆசிரியர்  பயிற்சிக்கான மோகமும் குறைந்தது, தனியார் நிறுவனங்களே மாணவர்கள் சேர்க்கை கிடைக்காமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. 
 

இந்த நிலையில், 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனவத்தால் ஒரு பயனும் கிடையாது. இந்த புதிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு, ஏற்கனவே ஆசிரியர் பயிற்சி நிறுவனம் செயல்பட்ட பகுதியில் ரூ. 2 கோடியே 45 லட்சம் மதிப்பில் நிரந்தரக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பயிற்சி பெறுவதற்குத்தான் மாணவர்கள் இல்லை. கட்டப்பட்ட கட்டடம் பயன்பாடின்றியே உள்ளதால், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ".என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் வலியுறுத்தலாக இருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்