அண்மைக் காலமாகவே யூடியூப் போன்ற இணையங்களில் வியாபார நோக்கத்தோடு ஆபாசமான செய்திகள், பேச்சுக்களை பதிவுடுபவர்களை காவல்துறை கைது செய்து வருகிறது. அதன் அடிப்படையில் அண்மையில் பப்ஜி கேம் மூலம் பிரபலமான மதன் என்பவர் ஆபாசமாக பேசி வெளியிட்ட கேம் வீடியோவை அடிப்படையாகக்கொண்டு அவர் கைது செய்யப்பட்டதோடு அந்த சேனலும் முடக்கப்பட்டது. இதற்கு முன்பே பல மாதங்களுக்கு முன்பு 'சென்னை டாக்ஸ்' என்ற யூடியூப் சேனலில் கருத்துக்கேட்பு என்ற பெயரில் பொது இடங்களில் கூடும் இளைஞர்களிடம், பெண்களிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்கப்பட்டு ஆபாசமாக பதில்கள் பெறப்பட்டு வியாபார நோக்கத்தோடு ஆபாசமாக வெளியிடப்பட்ட வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டதோடு சம்பந்தப்பட்ட நபர்கள் கைதும் செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில், இதேபோல் கண்ணில் சிக்காத பல யூடியூப் சேனல்கள் ஆபாசம் என்பதை மையமாகக் கொண்டு வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதில் ராபின் எஸ்ஜே என்பவர் நடத்தி வரும் யூடியூப் சேனலில் ஆபாசமான கருத்துக்கள் கொண்ட வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதிலும் யூடியூப் வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைக்கப்படும் 'தம்ப்நெய்ல்' எனப்படும் விடீயோவின் முகப்பு புகைப்படத்தில் சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை வைத்ததோடு 'பணமும் உண்டு சுகமும் உண்டு' என்ற டைட்டிலோடு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து காவல்துறை தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை கொடுத்து வருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமிகள், இளம்பெண்களின் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்று இருக்கும் நிலையில், சம்பந்தமே இல்லாத இளம்பெண்களின் புகைப்படங்களை அவருடைய வீடியோவின் முகப்பு பக்கத்தில் வைத்து ஆபாசமான தலைப்பையும் வைத்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த யூடியூப் சேனல் மட்டுமல்லாது இதுபோன்று தவறான கண்ணோட்டத்தோடு வீடியோக்களை வெளியிடும் அனைத்து சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ராபின் எஸ்ஜே என்ற இந்த சேனலில் முழுவதுமாக பாலியல் வியாபாரம், ஆண் விபச்சாரம் உள்ளிட்ட முழுக்க முழுக்க ஆபாச விஷயங்கள் தொடர்பாகவே அந்த நபர் வீடியோ வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.