Skip to main content

“பணியை முடிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” - விவசாயிகள் கோரிக்கை!

Published on 20/10/2021 | Edited on 20/10/2021

 

"Urgent action must be taken to complete the work" - Farmers demand
                                                                 மாதிரி படம்

 

2021 - 2025 பிரதம மந்திரியின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ரூ. 230.71 லட்சம் செலவில் கடலூர் மாவட்டம் பெருமுளை முதல் செவ்வேரி வரையிலான தார்சாலை பணி தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜல்லி கொட்டி ஆறு மாதங்கள் ஆகியும் சாலை போடப்படாததால் அச்சாலையைப் பயன்படுத்திச் செல்லும் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

 

இப்பகுதி விவசாய பூமி நிறைந்துள்ள பகுதியாக இருப்பதால் விவசாயிகள் விளை பொருட்களையும், விளைவிப்பதற்கான பொருட்களையும் கொண்டு செல்ல அவதிப்படுகின்றனர். மழைக்காலம் துவங்குவதற்கு முன் முடிக்க வேண்டிய பணியை அலட்சியம் காட்டிவந்ததால், தற்போது பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகி உள்ளனர். ஐந்து ஆண்டுகாலம் இருக்க வேண்டிய சாலையின் இந்நிலை தொடர்ந்தால் மூன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆயுளாக இருக்கக் கூடும்.

 

மேலும் பணி நடைபெறும் இடத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் பணிக்காலம் குறித்த தகவல் இல்லை, ஒப்பந்ததாரர் பெயரும் இல்லை. வெளிப்படைத்தன்மை இல்லாத இந்தப் பணியில் தரம் இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பணியை முடிக்க துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலதாமதம் ஆகும் பட்சத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்