காங்கிரஸ் பிரமுகர் மனைவியை கொலை செய்து விட்டு கைதி படம் பார்க்க சென்றவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதாவனத்தை சேர்ந்தவர் ராமசந்திரன். இவருக்கு வயது 70. இவர் காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு வயது 65. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். ராமச்சந்திரன் திருத்துறைப்பூண்டி சென்றுவிட்டு, திங்கள் கிழமை மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மனைவி ராஜேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதோடு வீட்டில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்துள்ளது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது வீட்டு வாசலில் இருந்த தேய்ந்து போன ஒரு ஜோடி செருப்பை கைப்பற்றி விசாரணையை நடத்தி வந்தனர். அந்த செருப்பு திருத்துறைப்பூண்டி வாளமாபுரத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான முருகானந்தம் என்பவருக்கு சொந்தமானது என்பதை அடுத்த சில மணி நேரங்களில் கண்டுபிடித்தனர். ராமசந்திரன் அணியும் வெள்ளை வேட்டி சட்டைகளை துவைப்பதற்கு முருகானந்தத்திடம் கொடுப்பது வழக்கம் . முருகானந்தமும் கொடுக்கும் துணிகளை வெளுத்து விட்டு பணம் வாங்கி செல்வார். அதே போல் முருகானந்தம் துவைத்த துணிகளை கொடுத்துவிட்டுச் சென்ற பின்னர் இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் சலவைக்குத் துணி எடுத்துச்செல்ல ராமசந்திரன் வீட்டுக்கு முருகானந்தம் அடிக்கடி வந்து சென்றதை உறுதி செய்த காவல்துறையினர், அவர் பயன்படுத்தி வந்த செல்போன் எண்ணை வைத்து எங்கு இருக்கிறார் என்பதை ஆய்வு செய்தனர். அப்போது அவர் திருத்துறைப்பூண்டியில் கைதி படம் ஓடும் திரையரங்கில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அந்த திரையரங்கிற்கு வெளியே படம் முடியும் வரை போலீஸார் காத்து கொண்டிருந்தனர். படம் முடிந்ததும். காலில் செருப்பில்லாமல் கை நிறைய பணத்துடன் வெளியே வந்த முருகானந்தத்தை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் கொலைக்கான காரணத்தை போலீஸார் கண்டுபிடித்தனர்.
சம்பவம் நடந்த அன்று துவைத்த துணிகளை கொடுப்பதற்கு வீட்டிற்குச் சென்றபோது ராஜேஸ்வரி பீரோவை திறந்து அதில் பணத்தை எடுப்பதை முருகானந்தம் பார்த்துள்ளான். இதைப்பார்த்த முருகானந்தம் பணத்துக்கு ஆசைப்பட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, பீரோவில் இருந்த பணத்தை திருடிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டை விட்டு தப்பித்துள்ளான். அப்போது, தான் காலில் போட்டு வந்த செருப்பை கொலை செய்த வீட்டில் விட்டுச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தான் கொலை செய்ததை யாரும் பார்க்காததால், யாருக்கும் தெரியாது என்ற எண்ணத்தில் தீபாவளிக்கு வெளிவந்த கைதி படம் பார்க்க முருகானந்தம் சென்றதாகவும், வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.