வேலூர் மண்டல நுகர்பொருள் வாணிப கிடங்கு, தொரப்பாடி என்கிற பகுதியில் உள்ளது. இந்த கிடங்கின் கண்காணிப்பாளராக இருப்பவர் மோகன். 52 வயதான மோகன் மீது சமீபத்தில் ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில் ஜீலை 4ந்தேதி காலை 7.30 மணிக்கு பணிக்கு வந்துள்ளார். பணிக்கு வந்தவர் அலுவலகத்தின் போர்டிகோவில் கையோடு கொண்டு வந்தியிருந்த கேனில் இருந்த பெட்ரோலை தன் மீது ஊத்திக்கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
தீ திபுதிபுவென எரிய அவர் அலறல் சத்தம் கேட்டு பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும், தொழிலாளர்களும் ஓடிச்சென்று அவர் மீது ஈரப்பைகளை வீசி தீயை அணைத்துள்ளனர். தீயை அணைத்தவர்கள் உடனடியாக அவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இருந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இன்று உயிரிழந்தார்.
தன் மீது துறை ரீதியான விசாரணை நடைபெறுவதால் தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுத்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என வழக்கு பதிவு செய்துள்ள பாகாயம் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.