Skip to main content

அடிக்கடி வந்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள்... காவல்துறையிடம் புகாரளித்த அக்கம் பக்கத்தினர்!

Published on 22/09/2021 | Edited on 22/09/2021

 

Unidentified persons who came frequently ... Neighbors who reported to the police

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது வடவீக்கம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சரவணன்(34) - மீனா(30) தம்பதி. இவர்களுக்கு 9 வயதிலும், ஆறு வயதிலும், நான்கு வயதிலும் ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த மீனா கடந்த 2 மாதத்திற்கு முன்பு  நான்காவதாக ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு சுபஸ்ரீ எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே மூன்று பெண் பிள்ளைகள் தற்போது நான்காவது பெண் குழந்தை பிறந்துள்ளது அதே போல் நாமும் வறுமையின் பிடியில் தள்ளாடுகிறோம் எனப் புலம்பியுள்ளனர். மேலும் இந்த நான்கு பெண் பிள்ளைகளையும் வளர்த்துப் படிக்க வைத்து திருமணம் செய்து கொடுப்பது என்பது இயலாத காரியம் என்று கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பேசி கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த  நான்காவதாகப் பிறந்த  பெண் குழந்தையைக் காணவில்லை எங்கே குழந்தை என அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர். அப்போது குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாகக் கணவன் மனைவி இருவரும் கூறியுள்ளனர். இந்த நிலையில் சமீப நாட்களில் அவர்கள் வீட்டுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அடிக்கடி வந்து சென்றுள்ளனர். அவர்கள் யார் என்று அக்கம் பக்கத்தினர் சரவணனிடம் கேட்டபோது, ‘எங்கள் தூரத்து உறவினர்கள்’ என்று சரவணன் கூறியுள்ளார். இந்த நிலையில் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் சமீபத்தில் பிறந்த பெண் குழந்தை வீட்டில் இல்லை எங்கே குழந்தை எனக் கேட்டால் ஏதாவது சாக்குப் போக்கு சொல்கிறார்கள் சம்பந்தம் இல்லாத ஆட்கள் வந்து போகிறார் ஏதோ மர்மமாக நடக்கிறது என்று ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கதிரவனுக்குத் தகவல் அளித்துள்ளனர்.

 

இதையடுத்து அவர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகனுக்கும், கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆகிய இருவருக்கும் தகவல் கூறியுள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து வடவீக்கம் சென்று விசாரணை நடத்திய போது அந்தப் பெண் குழந்தையை தங்களால் வளர்த்து ஆளாக்க முடியாது என்ற காரணத்தினால் குழந்தையை எங்கோ கொண்டு சென்று விற்று விட்டதாகவும் தற்போது சரவணன் மீனா தம்பதிகளின் வீடு பூட்டி இருப்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர். இதையடுத்து அவர்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து மீனா தம்பதிகளைத் தனிப்படை அமைத்துத் தேடினார்கள். இந்த வழக்கு சம்பந்தமாக ஈரோட்டைச் சேர்ந்த செந்தில்குமார், ராஜேந்திரன், மண்ணச்சநல்லூர் முத்தையன் ஆகியோர் கைது செய்தனர். அவர்கள் மூலம் சரவணன் மீனா தம்பதிகள் கோவைக்குக் குழந்தையை எடுத்துச் சென்று அங்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு அந்த குழந்தையை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அதோடு சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ததோடு குழந்தையையும் மீட்டுள்ளனர். வறுமையின் கொடுமையால் தங்கள் பெற்ற இரண்டு மாத பெண் குழந்தையைப் பெற்றோர்களே விற்பனை செய்த நிலையைக் கண்டு அரியலூர் மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்