Skip to main content

பாலியல் தொழில் செய்யும் பெண்களுடன் தனிமை… மாமூல் வேட்டை! எஸ்.ஐ. உள்பட 4 போலீசார் பணியிடை நீக்கம்!!

Published on 09/11/2021 | Edited on 10/11/2021

 

salem police commissioner order police suspended

 

சேலத்தில், பாலியல் தொழில் செய்யும் பெண்களோடு தனிமையில் இருந்ததுடன், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததாக காவல்துறை எஸ்.ஐ. உள்பட நான்கு போலீசாரை பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார்.  

 

சேலம் குமாரசாமிப்பட்டியைச் சேர்ந்தவர் நடேசன், அதிமுக பிரமுகர். இவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜ் மண்டல் (வயது 27) என்ற இளம்பெண் வசித்துவந்தார். இவர், தனது காதலனான சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பிரதாப் என்பவருடன் சேர்ந்து சேலம் பள்ளப்பட்டி, சங்கர் நகர் ஆகிய இடங்களில் அழகுநிலையம் மற்றும் மசாஜ் மையம் ஆகியவற்றை நடத்திவந்தார். 

 

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி, பூட்டப்பட்ட வீட்டுக்குள் ஒரு சூட்கேஸ் பெட்டியில் கை, கால்கள் மடக்கிக் கட்டப்பட்ட நிலையில் தேஜ்மண்டல் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. இவர், தன்னுடைய மசாஜ் மையத்தில் வேலை செய்துவந்த ஆண் ஒருவரையும், பெண்கள் மூவரையும் தான் தங்கியிருந்த அறைக்கு பக்கத்திலேயே தனியாக ஒரு அறை எடுத்து தங்க வைத்திருந்தார். 

 

அவரிடம் வேலை செய்துவந்த லப்லு, நிஷி ஆகிய இருவரும் தேஜ் மண்டல் கொலைக்குப் பிறகு தலைமறைவாகிவிட்டனர். காதலர்களான அவர்கள் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் சொந்த நாட்டிற்குத் தப்பிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடி தனிப்படை காவல்துறையினர் வங்கதேசம் விரைந்துள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. தேஜ் மண்டல் தனது மசாஜ் மையத்தில் அழகுக்கலை மற்றும் மசாஜ் சேவை அளிக்கும் போர்வையில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்தது  தெரியவந்தது. 

 

கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பாலியல் தொழிலை ஒழிக்கும் வகையில் சேலம் மாநகரில் உள்ள அனைத்து மசாஜ் மையங்களிலும் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். 

 

அப்போது பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தியதாகவும், பாலியல் தொழில் செய்துவந்ததாகவும் பல புரோக்கர்கள், பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், தேஜ்மண்டலும் அதே குற்றத்தில் ஈடுபட்டு வந்தாலும் கூட அவர் அப்போது கைதாகாமல் தப்பிச் சென்றுள்ளார். 

 

இதன் பின்னணியில் சேலம் மாநகர போலீசார் சிலர் தேஜ்மண்டலிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டிருப்பதும், அவ்வப்போது அவருடைய மசாஜ் மையத்தில் உள்ள பெண்களுடன் தனிமையில் இருந்திருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. 

 

இத்தகவல்கள், சேலம் மாநகர காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி நடத்திய விசாரணையில், அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அப்போது பணியாற்றிய எஸ்.ஐ. ஆனந்தகுமார், சிறப்பு எஸ்.ஐ. சேகர், காவலர் கலைச்செல்வன், தலைமைக் காவலர் மணிகண்டன் ஆகியோர் மசாஜ் செய்யும் பெண்களுடன் தனிமையில் இருந்ததும், பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. 

 

இதுகுறித்த விரிவான விசாரணை அறிக்கையை துணை ஆணையர் மாடசாமி, மாநகர காவல்துறை ஆணையரிடம் சமர்ப்பித்தார். இதையடுத்து, சமூக விரோத செயல்களுக்குத் துணை போனதாக எஸ்.ஐ. ஆனந்தகுமார் உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நான்கு பேரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டுள்ளார். 

 

இச்சம்பவம், குற்றத்திற்கு உடந்தையாக இருக்கும் காவல்துறையினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.