காவேரிப்பட்டணம் அருகே, கணித பாடத்தில் வெறும் ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றுவிட்டு, போலி சான்றிதழ்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (48). காவேரிப்பட்டணத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக மாவட்டக் கல்வி அலுவலர் கலாவதிக்கு புகார்கள் சென்றன.
அதன்பேரில், தலைமை ஆசிரியர் சங்கரின் அசல் கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டன. அவர், காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1990 & 1992ம் ஆண்டு பிளஸ்1, பிளஸ்2 படித்துள்ளார். பிளஸ்2 பொதுத்தேர்வில் 1200க்கு 307 மதிப்பெண்களும், கணித பாடத்தில் ஒரே ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றிருந்ததும் தெரியவந்தது.
இந்த மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்து, அதை வைத்து ராணிபேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் பட்டய பயிற்சி முடித்துள்ளார். இந்த சான்றிதழ்களை சமர்ப்பித்து 1997ம் ஆண்டு மார்ச் 18ம் தேதி, காவேரிபட்டணத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இந்த மோசடி குறித்து மாவட்டக் கல்வி அலுவலர் கலாவதி, காவேரிபட்டணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விவகாரம் காவல்நிலையம் வரை சென்றதை அறிந்த தலைமை ஆசிரியர் சங்கர், திடீரென்று தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகின்றனர். கணிதத்தில் வெறும் ஒரு மதிப்பெண் மட்டுமே பெற்றவர் 24 ஆண்டுகளாக அரசையும், மக்களையும் ஏமாற்றி ஆசிரியராக பணியில் இருந்திருப்பது பள்ளிக்கல்வி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.