நேற்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசைக் கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக பாராளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் பேரிடர் நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காததற்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. டங்ஸ்டன் சுரங்க ஆலை சட்டத்தை கைவிடும்படி பாஜகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஆதரித்ததாக அதிமுகவிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''மத்திய அரசு மேல் குற்றச்சாட்டுகள் திமுக நேற்று நிறைவேற்றிய தீர்மானங்களில் சொல்லப்பட்டுள்ளது. புயல் பாதிப்புக்கு நிவாரணம் தரவில்லை என்பதில் துவங்கி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு பாஜக ஆதரவளித்தது என்பது வரை எப்படி வழக்கம்போல ஒரு பொய்க் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ திமுகவினர். அதே வழக்கமான பாணியை இப்பொழுதும் இன்றும் பின்பற்றி இருக்கிறார்கள்.
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கிட வேண்டும் என ஒரு தீர்மானத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மத்திய அரசு ஒரு சில திட்டங்களை அமல்படுத்துகின்ற பொழுது மாநில அரசிடம் அவர்கள் அந்த தீர்மானத்தை அனுப்பி நீங்கள் இதை எப்படி பின்பற்றப் போகிறீர்கள், நடைமுறைப்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்பது வழக்கம். மாநில அரசு முதலில் வரும் பொழுது ஆமாம் நாங்கள் அமல்படுத்துகிறோம். செயல்படுத்துகிறோம் எங்களுக்கு நிதி உதவி கொடுங்கள் என ஒப்புதல் கொடுத்து விடுகிறார்கள். அதற்கு பின்பாக மத்திய அரசு அதனுடைய நடைமுறையோடு வருகின்ற பொழுது இது எங்களுக்கு ஒத்து வராது, நேரடியாக எல்லாவற்றையும் கேட்கிறீர்கள், எல்லா விஷயங்களையும் ஆன்லைனில் அப்லோட் செய்யச் சொல்கிறீர்கள் என்று சொல்லிவிட்டு மாநில உரிமை, இது எங்களுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது என வழக்கம்போல ஒரு டிராமாவை செயல்படுத்துவார்கள். அது ஒவ்வொரு துறையிலும் உண்டு.
விஸ்வகர்மா திட்டம் குலத்தொழிலை ஊக்குவிக்கின்றது எனச் சொல்லி இப்பொழுது அதே திட்டத்தை கைவினை கலைஞர்கள் திட்டம் என அமல் படுத்துகிறார்கள். எப்படியாவது எங்களுடைய கலைஞர்களுக்கு உதவி பெற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் விஸ்வகர்மா திட்டம் என்பது நம்மளுடைய தமிழகத்து கைவினை கலைஞர்களை உலகத்தோடு இணைக்கின்ற ஒரு புள்ளி. இன்று தமிழகத்தில் அந்த திட்டம் அமல்படுத்தப்படாததால் அந்த வாய்ப்பினை இழக்கிறார்கள்'' என்றார்.