ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை இன்று சந்தித்து பேச உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரஜினிகாந்த் சார்பாக அறிக்கை ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பு வெளிவந்த உடன் "தலைவர் கட்சி தொடங்குவது பற்றி அறிவிக்கத்தான் இந்த கூட்டத்தை அறிவித்துள்ளார்" என்று ரஜினி ரசிகர்கள் தங்களின் மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார்கள். இந்நிலையில் பெரிய எதிர்பார்ப்புகள் மத்தியில் இந்த கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதில், அரசியல் தொடர்பாகவும், கட்சி ஆரம்பிக்கலாமா என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் ரஜினி கேள்வி எழுப்பியதாக தெரிகிறது. ரஜினியிடம் பேசிய மூத்த நிர்வாகிகள், "முதல்வர் வேட்பாளராக நீங்கள் இருந்தால்தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் நம்மால் பெரிய அளவில் ஜொலிக்க முடியாதபடி ஆளும், ஆண்ட கட்சிகள் செய்து விடுவார்கள். எனவே வேறு ஒருவர் முதல்வர் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுங்கள்" என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்நிலையில் ஜனவரியில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் இதுவரை வெளியிடவில்லை.