கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகில் உள்ள பெ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள். இவரது மனைவி கன்னியாகுமரி. இந்த தம்பத்திக்கு முத்துலட்சுமி(16), மற்றும் சிவசக்தி(14) என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பூவனூரில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர்.
இந்த நிலையில், சகோதரிகள் இருவரும் தங்களின் பெற்றோருடன் பெண்ணாடம் அருகில் உள்ள திருமலை அகரத்தில் நடக்கும் கோவில் திருவிழாவை பார்க்க அவர்களது தாத்தா வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று முன்தினம் மாலை முத்துலட்சுமி, சிவசக்தி இருவரும் விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.
அவர்களது தாத்தா வீட்டின் எதிர்புறம் அய்யனார் கோயில் குளம் ஒன்று உள்ளது. சிறுமிகள் இருவரும் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பதட்டமடைந்த அச்சிறுமிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால், சிறுமிகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், நேற்று காலை அய்யனார் கோயில் குளத்தில் இரு பெண் பிள்ளைகளின் சடலம் தண்ணீரில் மிதந்துள்ளது. இதைக் கண்டு பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கதறி அழுதனர்.
இது குறித்த தகவல் பெண்ணாடம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமிகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெண்ணாடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.