சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள மோரூர் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (38) கட்டடத் தொழிலாளி. இவருடைய மனைவி பர்வன் பானு. இரு வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள், கடந்த 13 ஆண்டுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் தன்னிடம் குடும்பம் நடத்த வருமாறு ராமகிருஷ்ணன் மனைவியை பலமுறை அழைத்துள்ளார். ஆனால் பர்வீன் பானு குடும்பம் நடத்த வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், மே 27 ஆம் தேதி இரவு சேலம் மாவட்டக் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, அவசர எண்ணான 100க்கு அழைத்துள்ளார். அப்போது அவர், சங்ககிரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள மசூதி மீது பெட்ரோல் குண்டு வீசி, இரு மதத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து அளித்த தகவலின் பேரில், சங்ககிரி சிறப்பு எஸ்.ஐ. பழனிசாமி, மிரட்டல் விடுத்த ராமகிருஷ்ணனை மடக்கிப் பிடித்து விசாரித்தார். அவர், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விரக்தியில் மிரட்டல் விடுத்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.