அண்மையில் காங்கிரஸில் சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்த விஜயதரணி பாஜகவுக்கு தாவியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜகவில் உள்ள சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் அதிமுகவில் இணைய இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் ஒன்று அல்ல இரண்டு பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இணைய இருப்பதாக அதிமுகவின் அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சரஸ்வதி. இவருடைய மருமகன் ஆற்றல் அசோக்குமார். இவர் பாஜகவில் ஓபிசி அணி துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில் பாஜக மாநில தலைவருக்கும், ஆற்றல் அசோக் குமாருக்கும் இடையே அண்மைக்காலமாகவே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் சேர்ந்திருந்தார் ஆற்றல் அசோக்குமார். இந்நிலையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதியும் தமிழக பாஜகவில் ஏற்பட்ட முரண் காரணமாக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியது. ஆனால் இந்த தகவலை எம்.எல்.ஏ சரஸ்வதி தரப்பு மறுத்துள்ளது.
இந்நிலையில் ஒரு சிட்டிங் எம்எல்ஏ அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் என்பவர் இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார். 'இன்று மதியம் 2:15 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் அதிமுகவில் சேர உள்ளனர். நான் அதிமுகவின் ராஜாவாக உள்ளேன்; நான் எதற்கு பாஜகவில் சேர்ந்து கூஜா தூக்கப்போகிறேன். கொங்கு மண்டலத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்' என அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.