Skip to main content

“தமிழகத்தில் பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் தொற்றை தடுக்க வேண்டும்”- டிடிவி தினகரன்

Published on 04/01/2025 | Edited on 04/01/2025
TTV Dhinakaran said We must prevent spread of scrub typhus in TN

ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தமிழகத்தில் பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) எனும் புதிய வகை பாக்டீரியா தொற்று – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை திமுக அரசு பாதுகாக்க வேண்டும்.

தமிழகத்தில் வேகமாக பரவிவரும் ஸ்க்ரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், நாள்தோறும் 10 முதல் 20 பேர் தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஸ்க்ரப் டைபஸ் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை துரிதப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, தடிப்புகள் போன்ற நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கி அனைத்து விதமான அரசு மருத்துவமனைகளிலும் தனிப்பிரிவும், போதுமான மருத்துவர்களும் இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், ஸ்க்ரப் டைபஸ் நோய்த்தொற்று தொடர்பாக பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தும் இந்நேரத்தில், புதர் மண்டிய வனப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்