ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி(36). இவர் மீது சத்தியமங்கலம் உள்ளிட்ட காவல்நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக 15 வயது சிறுவன் ஒருவர், பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கார்த்தி சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கத்தி கூச்சலிட, அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்களிடம் சிறுவன் நடந்ததை கூறியவுடனே, கார்த்தியை சுற்றி வலைத்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்தியை கைது செய்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் சிறுவன் ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.