கொரோனா போன்று வேகமாக பரவும் புதிய வைரஸ் ஒன்று சீனாவில் பரவி வருவதால் உலக மக்களையே அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. எச்.எம்.பி.வி. (HMPV) எனப்படும் மனித மெடாநிமோ வைரஸ் பாதிப்பால் சீனாவில் உள்ள பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எச்எம்பிவி, கொரோனா, ஃபுளு காய்ச்சல் ஆகிய நோய்கள் ஒரே நேரத்தில் தாக்குவதால் சீனாவே திணறி வருகிறது. இத்தகைய சூழலில் தான் இந்தியாவில் முதல்முறையாக இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
அதிலும் குறிப்பாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளாத இரண்டு குழந்தைகளுக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை, அதனைத் தொடர்ந்து 8 மாத ஆண் குழந்தை என இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை டிஸ்சார்ஜ் ஆகி உள்ளது. தொடர்ந்து எட்டு மாத ஆண் குழந்தைக்குச் சிகிச்சை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதே சமயம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 2 மாதக் குழந்தைக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே நாளில் 5 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.