![trichy vao officer incident cm fund announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/ql7j7snd0aa_ax_P1F4Qpq4f7-EWIVg0JB-9AtTRkCQ/1589521772/sites/default/files/inline-images/cm%2045666.jpg)
திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த வி.ஏ.ஓ. குமார் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், சிறுகமணி மேற்கு கிராமத்திலுள்ள சேதுராப்பட்டி அரசினர் பொறியியல் கல்லூரியில், விமானம் மூலம் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள், தனிமைப்படுத்தப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
![trichy vao officer incident cm fund announced](http://image.nakkheeran.in/cdn/farfuture/jAFNDVJsVf1bkNedghspPqCwb7O4wLfCXm2Pb273da0/1589521790/sites/default/files/inline-images/EYB4rnxVAAEojql.jpg)
அவர்களைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அலுவலர் குமார் மே 13- ஆம் தேதி தன்னுடைய பணியை முடித்து வீடு திரும்பும் போது, மதுரை- சென்னை பைபாஸ் சாலையில், தனியார் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் குமாரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்க வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.