திருச்சி, மலைக்கோட்டை பகுதியில் 26 ஆயிரம் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் இந்த மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்த மாத்திரைகள் அனைத்தும் போதைப் பொருளாகப் பயன்படுத்த இருந்தது. இதில், போதை மாத்திரைகளை விற்ற சக்திதாசனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சமீபகாலமாக திருச்சியில் மாத்திரைகளைத் தூளாக்கி அதனை ஊசி மூலம் உடலில் ஏற்றிக் கொள்ளும் பழக்கம் அதிகமானதால் மாநகர காவல் ஆணையர் தனிப்படை அமைத்து, அதனைப் பயன்படுத்துவோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், அந்த மாத்திரைகளையும் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.
இது தொடர்பாக தற்போது 5 பேரிடம் கோட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், ஜீவா நகர் குடோனுக்கு மருந்து விற்பனை பிரதிநிதி இந்த மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வைத்து விற்பனை செய்ததாகத் தெரியவந்துள்ளது. இந்த போதை மாத்திரை விவகாரத்தில் வேறு யார் யாரெல்லாம் தொடர்பில் உள்ளார்கள் என்பது குறித்து திருச்சி மாநகர துணை ஆணையர் சக்திவேல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மாத்திரைகளை விற்ற சக்திதாசனை காவல்துறையினர் பிடித்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு சக்திதாசன் தனியாக மருந்துக் கடை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் மட்டுமே நடத்தியுள்ளார். பின்பு கடையை மூடிவிட்டு அதற்கான உரிமத்தை வைத்து தற்போது இந்த மாத்திரைகளை பல்வேறு பகுதிகளுக்கு வாங்கி விற்பனை செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.