ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ளது வேம்பி கிராமம். இந்த கிராமத்தின் ஏரிக்கரை ஓரமாக இருளர் இனத்தை சேர்ந்த சில குடும்பத்தினர் குடிசைப்போட்டு வாழ்ந்து வருகின்றனர். அக்குடும்பத்தினருக்கு அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அம்பேத்கர் சில உதவிகளை செய்து வருகிறார்.
இந்தநிலையில் அவர்களுக்காக சாதிச்சான்று பெற்றுத்தர வருவாய் துறையினரை அணுகியுள்ளார் அம்பேத்கர். அதிகாரிகள் கேட்ட ஆவணங்கள் பலவற்றை தந்தும் அதிகாரிகள் சாதிச் சான்று வழங்கவில்லையாம். சாதி சான்றிதழ் கிடைக்காததால் மூன்று இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் கலவை தாலுக்கா அலுவலகம் முன்பு டிசம்பர் 29 ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிந்து அவர்கள் கேள்வி எழுப்பியதும் உடனடியாக சில அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஆவணங்களை ஆய்வு செய்து விரைவில் சான்றிதழ் தர நடவடிக்கை எடுக்கிறோம் என வாக்குறுதி தந்ததால் போராட்டத்தைக் கைவிட்டனர்.