புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மாதம் சிலர் டாஸ்மாக் கடையில் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றபோது, போலீசாருக்கு தகவல் கிடைத்து சம்மந்தப்பட்ட நபர்களை பிடித்து விசாரணை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர்கள் சொன்ன தகவலின்படி அடுத்தடுத்து, நாகர்கோயில் வரை பலர் பிடிபட்டதுடன் ரூ. 68 லட்சம் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்து அச்சடிக்கும் இயந்திரங்களையும் புதுக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் மேலும் பலர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை பெருமாள் கோயில் அருகே உள்ள மார்க்கெட் காய்கறி கடையில் காய்கறி வாங்கும்போது கே.எல்.கே.எஸ் நகரை சேர்ந்த என்.ஜயராமன் (52) ரூ. 500 கள்ள நோட்டை கொடுத்து மாற்ற முயன்றுள்ளார்.
இது குறித்து காய்கறி கடை உரிமையாளர் சரவணன் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விரைந்து வந்த போலீசார் ஜயராமனை பிடித்து விசாரித்ததில், கள்ள நோட்டுகளை இவர்களே அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரியவந்தது.
அதன்படி, கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்டு வந்த ஜயராமன், காந்தி நகர் 6-ம் வீதியை சேர்ந்த எம்.வேலு(50), பனையப்பட்டியை சேர்ந்த கே.பழனியப்பன்(53) ஆகியோரை கணேஷ்நகர் போலீஸார் நேற்று செய்தனர்.
மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில் ரூ. 8 லட்சத்திற்கான கள்ள நோட்டுகளை அச்சடித்து அதில் மாற்றியது போக மீதம் இருந்து சுமார் ரூ.7. 14 லட்சம் மதிப்புள்ள ரூ.2,000, ரூ.500 கள்ள நோட்டுகள் மற்றும் கார், கம்ப்யூட்டர், கலர் பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதற்கு உடந்தையாக செயல்பட்டவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டு தேடி வருகின்றனர்.