புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் நிலத்தடி நீர் சேமிக்கவும் நீர்நிலைகளை பாதுகாக்கும் பொருட்டும் கிராம இளைஞர்கள் இணைந்து தங்களின் சொந்த செலவில் கடந்த மே 12 ந் தேதி அம்புலி ஆறு அணைக்கட்டு, குளங்கள் சீரமைப்பு பணிகளை தொடங்கினார்கள். சீரமைப்புப் பணி தொடர்ந்து 50 வது நடந்து வருகிறது. இதனால் பல குளங்கள் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் உள்ள குளங்கள், வரத்துவாய்க்கால்களை சீரமைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பணிகள் தொடங்கிய 50 வது நாளை முன்னிட்டு தற்போது பணிகள் நடந்து வரும் பெரிய குளம் பகுதியில் பிடாரி அம்மன் கோயில் வளாகத்தில் மரக்கன்றகள் நடும் விழா மற்றும் முதன்முதலில் சீரமைப்பு பணிக்கு தனது 100 நாள் வேலை சேமிப்பு பணம் ரூ.10 ஆயிரத்தை நிதியாக வழங்கிய முதாட்டி ராஜம்மாளுக்கு பாராட்டு விழாவும் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ், அறந்தாங்கி வனத்துறை அதிகாரிகள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் இளைஞர்களை ஊக்கப்படுத்த நிதி வழங்கிய ராஜம்மாளை பாராட்டியதுடன் இளைஞர்களையும் பாராட்டினார்கள். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட சிவகுருபிரபாகரன் ஐ.ஏ.எஸ். கூறும் போது.. ஒரு கிராமத்தின் மிகவும் முக்கியமானது நீர் ஆதாரம். ஆந்த நீர் ஆதராம் இல்லை என்றால் விவசாயம் செழிக்காது. அப்படி விவசாயம் பொய்த்துப் போய்விடக் கூடாது என்று கொத்தமங்கலம் இளைஞர்கள் சொந்த முயற்சியில் ஏரி, குளம், வரத்துவாய்க்கால்களை சீரமைத்து வருவது பெருமையாக உள்ளது. பாராட்டத்தக்கது. மேலும் இந்த இளைஞர்களை ஊக்கப்படுத்த தனது பல நாள் உழைப்பு சேமிப்பு பணத்தை குளம் சீரமைக்க கொடுத்த மூதாட்டியின் செயலே மேலும் சிறப்பானது. தொடர்ந்து குளத்தின் கரைகளை வலுப்படுத்த மரக்கன்றுகள் நடப்படுவதும் நன்றாக உள்ளது. இளைஞர்களின் இந்த நற்செயலைப் பார்த்து எங்கள் கிராமத்திலும் இதேபோன்ற பணிகளை தொடங்கி இருக்கிறோம். மேலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள இளைஞர்கள் தாங்கள் நீர்நிலைகளை பாதுகாக்க களமிறங்க வேண்டும். அரசிடம் இருந்து எதிர்பார்ப்பதை கிராம சபை கூட்டங்களில் தீர்மானமாக கொண்டு வந்து கிராம மக்களுடன் விவாதித்து பெறலாம் என்றார்.