சிதம்பரத்தில் தனியார் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் 42வது நிறைவு விழா நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றினார்.
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளையின் சார்பில் 42 ஆம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு ரத வீதியில் உள்ள ராஜா சர் அண்ணாமலை செட்டியார் வளாகத்தில் கடந்த 18 ஆம் தேதி ஆரம்பித்த மகா சிவராத்திரி தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்று வந்த நிலையில் 22 ஆம் தேதி நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், “நடராஜர் ஆதி கடவுள் என்பது அனைவரும் அறிந்தது. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை மனித படைப்புகள் பஞ்ச பூதங்களுடன் இணைந்துள்ளது. அதில் நான்கு தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாடு ஆன்மீக தலைநகரம். சனாதனத்தின் மையப்புள்ளி தமிழகம் தான். கலாச்சாரம் என்பது வாழும் இடங்களை பொறுத்தது அல்ல. பாரத கலாச்சாரம் என்பது சனாதன தர்ம வேரிலிருந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக அதைச் சொல்ல தயங்குகின்றோம். நமது நடனமும் இசையும் இயற்கையோடு ஆன்மீகத்தோடு ஒன்றியுள்ளது. அதனை தவற விட்டு விடக்கூடாது. நமது கலாச்சாரத்தில் நாத்திகர்களும் உள்ளனர். அவர்களைத் தள்ளி வைக்க முடியாது. அவர்களும் ஒன்றிணைந்தது தான் பாரதம். பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா உள்ளது என நன்றி கூறி ஆளுநர் ரவி உரையை முடித்தார்.
அதனைத் தொடர்ந்து சிதம்பரம், சென்னை, பெங்களூர், மும்பை, கடலூர், உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்டு பரதம், குச்சிப்புடி, உள்ளிட்ட நடனங்களை ஆடி நடராஜ பெருமானுக்கு சமர்ப்பணம் செய்தனர். இந்த நாட்டிய விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டியத்தை பார்த்து ரசித்தனர். இதில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், உதவி ஆட்சியர் சுவேதா சுமன், ஏஎஸ்பி ரகுபதி மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பந்தம், அருள் மொழி செல்வன், முத்துக்குமரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அண்மையில் 'கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது' என தமிழக ஆளுநர் ரவி பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சிதம்பரம் வந்துள்ள ஆளுநருக்கு நாளை காலை 8 மணியளவில் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.