“தருமபுர ஆதீனம் இறைவனுக்குச் சமமானவரா? கடவுளைச் சுமக்கும் பல்லக்கில், மடாதிபதியைச் சுமக்க வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் தலைவர் வா.ரங்கநாதன், “ஆன்மீகத்தில் மதவெறியைக் கலந்து தமிழகத்தின் பொது அமைதியைச் சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்து “பட்டனப் பிரவேசத்தை தடை செய்த தமிழக அரசை அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது! தமிழக அரசின் செயல் சரியான சமத்துவ இறைப்பணி எனப் போற்றுகிறது” எனக் கூறுகிறார்.
தனது அறிக்கையில் வா.ரங்கநாதன்; “குன்றக்குடி ஆதீனம் முதல் தமிழகத்தின் அனைத்து ஆதீனங்களும், காலத்துக்கும், கடவுளுக்கும் ஒவ்வாதது என்று கைவிட்ட, பட்டனப் பிரவேசம் என்ற மனிதனை, மனிதன் தூக்கும் பல்லக்கு மரபை மீண்டும் கையிலெடுத்து, தமிழகத்தின் சமத்துவ மரபுக்கு எதிராக நிற்கிறார் தருமபுர ஆதீனம். சைவம், தமிழ் என்று பேசும் தருமபுர ஆதீனம் சிதம்பரம் நடராசர் கோயிலில் கடந்த 13 ஆண்டுகளாக நடந்துவரும், தமிழில் தேவாரம், திருவாசகம் பாடும் போராட்டத்தை ஒரு நாளும் ஆதரித்ததில்லை. தேவாரம், திருவாசகம், தமிழுக்காகப் பேசவில்லை என்பது மட்டுமல்ல, குமூடிமலை சிவனடியார் ஆறுமுகச்சாமியை, சிதம்பரம் தீட்சிதப் பார்ப்பனர்கள் தாக்கியபோதும் மவுனம் காத்தார். ஆதீனத்திற்குக் கட்டுப்பட்ட வைத்தீசுவரன் கோயில் உட்பட எந்தக் கோயிலிலும் தமிழில் குடமுழுக்கு செய்ததில்லை. சமஸ்கிருதத்தை மட்டுமே ஆதரித்துப் பயன்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் உள்ள அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக வேண்டி, தொடர்ந்து 50 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட மக்கள் போராட்டத்தை இவர் கண்டுகொண்டதில்லை. தமிழ் மக்களின் பணத்தில் வாழும் தருமபுர ஆதீனம், தமிழக மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை மடத்துக்கு அழைத்து விழா நடத்துகிறார். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு பாதுகாப்பில்லை எனப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மதுரை ஆதீனம் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பா.ஜ.க ஆதரவு இராம ரவி வர்ம குமார், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து பேசுகிறார். அவரைத் தொடர்ந்து மன்னார்குடி ஜீயரான செண்டலங்கார ஜீயர், "பல்லக்குத் தூக்குவதைத் தடுத்தால் தமிழ்நாட்டு அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் நாட்டில் நடமாட முடியாது" என மிரட்டுகிறார். ஆதீனங்கள், பா.ஜ.க, ஆளுநர் ஆதரவு, திராவிட இயக்க எதிர்ப்பானது, ஆன்மீகத்தில் மதவெறி அரசியலைக் கலப்பதாகும். தமிழகத்தின் பொது அமைதியைச் சீர்குலைக்க முயலும் மன்னார்குடி ஜீயரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
ஆளுநர் மீதான மக்களின் எதிர்ப்பை திசைதிருப்பும் விதமாகவே, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும் பட்டனப் பிரவேச பிரச்சனையை வைத்து தமிழக அரசிற்கு எதிராகப் பேசுகிறார்கள். திமுக அரசு, சைவத்திற்கு எதிரானது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்க ஆதீனமும், பாஜக-வும் இணைந்து முயற்சிக்கிறது. உண்மையில் ஆன்மீகத்தில் சமத்துவத்தை உருவாக்கி, ஆன்மீகத்தைக் காத்தது திராவிட அரசுதான்.
கோயிலில் அனைத்துச் சாதி தமிழர்களை அழைத்துச் சென்றது முதல், கருவறையில் பூஜை செய்ய வைத்தது வரையிலான வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தியது திராவிட இயக்கம்தானே தவிர, எந்த மடாதிபதியும் அல்ல. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சைவர்கள், இந்துக்களின் வழிபாட்டு, பூசை உரிமைகளுக்கு தருமபுர ஆதீனம் என்றாவது பேசியுள்ளாரா? 206 அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் ஆகமம், வேதம், தேவாரம், திருவாசகம், மந்திரங்கள் கற்று, தீட்சை வாங்கி, சான்றிதழும் பெற்று 2007 முதல் 2021-ல் தி.மு.க ஆட்சி வரும்வரை 15 வருடங்கள் சாதியால் பணி மறுக்கப்பட்டு தெருவில் நின்றோமே, அப்போதெல்லாம் தருமபுர ஆதீனம் எங்கே சென்றார்? லிங்காயத் என்ற வீர சைவ மதத்தை உருவாக்கிய கர்நாடகாவின் மாபெரும் ஆன்மீகப் புரட்சியாளர் பசவண்ணா அவர்களே, பல்லக்கில் மனிதனை, மனிதன் சுமப்பதை எதிர்த்துள்ளார். பசவண்ணா, குன்றக்குடி ஆதீன கர்த்தரைவிட தருமபுர ஆதீனம் பெரியவரா? தமிழுக்கும், சைவத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டு என்ன?
பட்டனப் பிரவேசத் தடை என்பது, ஆன்மீக நடவடிக்கை அல்ல. அரசியல் சட்ட நடவடிக்கை. இறைவன் விரும்பும் மனித நேய, சமத்துவ நடவடிக்கை. அரசியல் சட்டப்படி, தனிமனிதனின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய அரசியல் சட்டக் கடமை தமிழக அரசுக்கு உண்டு. தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல், பால்ய விவாகம், மனிதக் கழிவை மனிதனே அகற்றல், கை ரிக்ஷா ஒழித்தல் போன்ற அரசியல் சட்ட விரோத நடவடிக்கை போன்றதே மனிதனை, மனிதன் சுமக்கும் பல்லக்கு தூக்கும் நிகழ்வு. எனவே, பட்டணப் பிரவேசத் தடை சரியான நடவடிக்கையே. கடந்த 2010-ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோயிலில் பிரம்மரதம் என்ற பல்லக்கு நிகழ்வை கோயிலின் இணை ஆணையர் ஜெயராமன் அவர்கள் தடைசெய்தது, சரியான நடவடிக்கை என வேத வியாச லட்சுமி நரசிம்ம பட்டர் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்றத் தீர்ப்பைப் பின்பற்ற வேண்டியது தமிழக அரசின் அரசியல் சட்டக் கடமை. எனவே, முற்றும் துறந்தவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் தருமபுர ஆதீனம், பட்டனப் பிரவேசம் என்ற அதிகாரத்துவ நடவடிக்கையை, மனித நேயமற்ற, கண்ணியக் குறைவான, அரசியல் சட்ட விரோதச் செயலை உடனே கைவிட வேண்டும். ஆன்மீகத்தில் பார்ப்பனீய அரசியலைக் கலந்து, அமைதிப் பூங்காவான தமிழகத்தைச் சிதைக்க வேண்டாம். இறைவன் விரும்பியபடி சமத்துவ ஆன்மீகத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் என்றும் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.