தனிக்காட்டு ராஜா என கருதப்பட்ட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இப்போது, வீழ்ந்து போன சாம்ராஜ்யமாக மாறி இருக்கிறது. குரூப்-4 போலவே, 2017-ல் நடந்த குரூப்-2 தேர்விலும் முறைகேடு நடந்ததை ஒப்புக் கொண்டிருக்கிற டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு, இப்போதுதான் இந்த விவகாரமே தெரியுமா? என நண்பர் ஒருவர் ஆதங்கப்பட்டார்.
அவரே தொடர்ந்து "ஒரு பள்ளிக்கூடத்தில இருக்கிற வாத்தியாருக்கு மக்கு மாணவன் யாரு? நன்கு படிக்கிற மாணவன் யாருங்கிறது நல்லாவே தெரியும். ஒரு கிளாஸ்ல பரீட்சை எழுதுன எல்லாரும் நூற்றுக்கு 100 வாங்கி பாசாகியிருக்கிறாங்களே, மத்த கிளாஸ்ல எழுதுனவங்க பெயிலாகி இருக்காங்களே?. இந்த கிளாஸ்ல மட்டும் பசங்கா காப்பி அடிச்சாங்களா? அல்லது பேப்பரையே மாத்தி வச்சிட்டாங்களான்னு பேப்பரை திருத்தி ரிசல்ட் வெளியிடும்போது வாத்தியாருக்கு தெரிஞ்சிருக்கும் அல்லவா? அப்படீன்னா.... 2017-ல் நடந்த குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருக்கிறது என்பது, 2018-ல் ரிசல்ட் வெளியிடும்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கும், டிஎன்பிஎஸ்சி சேர்மனுக்கும் ஏன் தெரியாமல் போனது?!"
அரசு தேர்வுக்கு நீண்ட காலமாகத் தயாராகி வரும் மற்றொரு நண்பர் நம்மிடம், "டிஎன்பிஎஸ்சியில் முறைகேடா தேர்வு எழுதி வேலையில இருக்கிறவங்களை, இப்போது தேடித் தேடிப் போய் பிடித்து விசாரித்து, தினமும் 4 பேர் என்ற அடிப்படையில் ரிமான்டுக்கு சிபிசிஐடி போலீஸ் அனுப்பி வருகிறது. ஆனால், முக்கிய புள்ளிகளை இதுவரை கைது செய்யவில்லை. இவங்க முறைகேடு செய்து, பணம் கொடுத்து பணிக்கு வந்தார்கள் என்றால், பணம் வாங்கியவர்கள் யார்? அதனைப் பங்கு போட்ட மேல்மட்ட புள்ளிகள் யார்? என்ற விபரத்தை சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கவில்லையே ஏன்? என்று நியாயமான கேள்வியை முன்வைத்தார்'
"இப்படித்தான் 2 மாசத்திற்கு முன்னாடி நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் பண்ணிருக்காங்கன்னு பிரச்சனை எழுந்தது. சென்னை, தேனி, வேலூர், காஞ்சிபுரம் என பல ஊர்களில் விசாரணை நடத்தி பலரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தார்கள். கிட்டத்தட்ட 15 நாட்கள் ஊடகங்களில் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்குப் பிறகு அமுங்கிப் போனது. அதே மாதிரிதான் இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த விஷயம் பேசப்படும். அப்புறம் நாமே மறந்துவிடுவோம்" என்றார் ஆசிரியர் ஒருவர்.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டுக்கு முக்கிய புள்ளி என்று சொல்லப்படும் காவலர் சித்தாண்டியை இப்போது வளைத்துள்ள சிபிசிஐடி போலீஸார், மோசடிக்கு துணைபோன கருப்பு ஆடுகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்தால்தான், அரசுப் பணியாளர் தேர்வாணையம் மீது தேர்வர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அது நடக்காத பட்சத்தில் எப்போதுமே சந்தேகப் பார்வை விழத்தான் செய்யும்!