Skip to main content

“திருமாவளவனும், ராமதாஸும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - வேல்முருகன் 

Published on 08/11/2024 | Edited on 08/11/2024
Strong action should be taken by Thirumavalavan and Ramadoss says Velmurugan

விக்கிரவாண்டி மாநாட்டில் கூடிய கூட்டத்தினால் அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்ள  பிரச்சனைகளைக் கிளப்புவதாக தனக்கு சந்தேகம் எழுகிறது என கடலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். 

நெய்வேலி சம்மட்டிக்குப்பம் பகுதி பாமக மாவட்டச் செயலாளராக இருந்த ஆறுமுகம் என்பவர் கடந்த 2016 ம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் சென்றபோது அரிவாளால் வெட்டப்பட்டார். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ உட்பட 19பேர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு  தொடர்பாக நேற்று(நவ.7) கடலூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வேல்முருகன் ஆஜராகினார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை பகுதியில் கொடிக்கம்பங்கள் இடித்த பிரச்சனை தமிழக அளவில் இருபெரும் சமூக சீர்கேட்டை உருவாக்கும் நிலையில் உள்ளதையடுத்து அக்கட்சிகளின் தலைவர்கள் திருமாவளவன் மற்றும் ராமதாஸ் ஆகியோர் இதற்கு காரணமானவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழகத்தில் டாஸ்மாக் தான் பல பிரச்சினைகள் ஏற்படுத்துகிறது, பிரச்சனைக்குரிய இடங்களில் கொடிக்கம்பங்கள் நடப்படுவதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தடுக்க வேண்டும். அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கட்சி கொடி கம்பங்களை அகற்றினால் முதல் ஆளாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி கம்பங்களை நானே முன்னின்று அகற்றுவேன் என உறுதி அளித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “அதிமுக, திமுக என எந்த கட்சியில் நான் கூட்டணியில் இருந்தாலும் அந்த கட்சி ஆட்சியில் குறை இருக்கும் பொழுது அதனை நான் சுட்டிக்காட்ட எப்பொழுதும் தவறுவதில்லை. என்னைப்பற்றி தவறாக பேசுபவர்கள் அரசியலில் கத்துக்குட்டித்தனமாக பிதற்றுபவர்கள். விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழகம் கூடிய கூட்டத்தினால் அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை காட்டிக் கொள்ள இதுபோன்று பிரச்சனைகளை எழுப்புவதாக தனக்கு சந்தேகம் எழுகிறது என்றார்.

சார்ந்த செய்திகள்