சமூக வலைதளங்கள் மூலம், தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அநாகரீமான கருத்துக்களை வெளியிடும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திரப் பிரதேசம் மாநிலம், குண்டூர் மாவட்டம் தள்ளாயப் பாலத்தில் நேற்று நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது, “சிலர் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி பெண்களுக்கு எதிராக கேவலமான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா ஆகியோருக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் அவதூறான கருத்துக்களை பதிவிடுகின்றனர். சைக்கோக்கள் போல் அநாகரீகமான கருத்துக்களை பதிவிடுகிறார்கள். இது என்னை மனதளவில் புண்படுத்துகிறது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அநாகரீக கருத்துக்களைப் பதிவிடும் சமூக விரோதிகளை தண்டிக்க சட்டத்தை உருவாக்க தேசிய மற்றும் சர்வதேச சட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும். . தீயவர்களிடமிருந்து அரசைக் காப்பது நமது கடமையாகும். ரவுடிகளிடம் இருந்து ஏதேனும் மிரட்டல்கள் வந்தால், விளைவுகள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை வெளியிடும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வார் ரூமை அமைத்துள்ளதாக தெரிகிறது” என்று கூறினார்.