திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் மலையடிவாரத்தில் ரெட்டிமாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலத்தில் அவரது ஐந்து பசு மாடுகள் வைத்து பராமரித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்(6.11.2024) மாலை மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் நான்கு திரும்பி வந்துள்ளன இதில் ஒரு பசுமாடு மட்டும் வராததால் அப்பகுதி முழுவதும் தேடிய பொழுது கழுத்து துண்டிக்கப்பட்டு பசுமாடு இறந்து கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதியினர் வனத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, மலைப்பகுதி என்பதால் நாட்டு வெடிகுண்டு வைக்கும் கும்பல் செய்து சமூக விரோத செயலா?அல்லது மர்ம நபர்களால் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் அடிக்கடி நாட்டு வெடிகுண்டு வெடித்து மேச்சலுக்கு விடப்படும் மாடுகள் வாய் கிழிந்த நிலையில் காணப்பட்டு வருவதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை கண்டறிந்து கடுமையான சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் அப்பகுதி மக்கள் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.