
சென்னை மெரினாவில் பானி பூரி சாப்பிட்ட இளம்பெண் ஒருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னையைச் சேர்ந்த 24 வயதான மோனிஷா என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் மெரினா பீச்சுக்கு சென்றுள்ளார். பின்னர் பறக்கும் ரயிலில் ஏறிய மோனிஷா மற்றும் அவரது நண்பர்கள் மயிலாப்பூர் ரயில் நிலையம் வந்து கொண்டிருந்த போது திடீரென மோனிஷா மயங்கி விழுந்துள்ளார். அவருடன் வந்திருந்தவர்கள் உடனடியாக மோனிஷாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மோனிஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அறிந்த திருவான்மியூர் ரயில் நிலைய போலீசார் மோனிஷாவுடன் வந்திருந்த தோழிகளிடம் விசாரணை நடத்தினர். அப்பொழுது மோனிஷா தங்களுடன் மெரினா பீச்சுக்கு வந்ததாகவும், அங்குள்ள கடை ஒன்றில் பானிபூரி சுண்டல் சாப்பிட்டதாகவும் அதிலிருந்து ஒரு மாதிரியாக காணப்பட்டதாகவும் பின்னர் வீடு திரும்ப ரயிலில் ஏறிய சில நிமிடங்களில் மயங்கி விழுந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மோனிஷாவின் உயிரிழப்புக்கு அவர் சாப்பிட்ட பானி பூரி, சுண்டல் காரணமா அல்லது வேறு ஏதேனும் அவருக்கு உடல்நலக் கோளாறு இருக்கிறதா என்பது பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.