திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த செத்தமலைப் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி 27 வயதான காளியம்மாள். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
மார்ச் 3 ந்தேதி காலை காளியம்மாள் மற்றும் அவருடைய பாட்டி 60 வயதான நீலா இருவரும் வீட்டிற்கு வெளியே சமையல் செய்து கொண்டு இருந்தனர். அப்போது சுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த 22 வயதான சுரேந்தர், தண்ணீர் டிராக்டரில் அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் நிரப்பிக் கொண்டு அந்த வழியாக அதிவேகமாக வந்துள்ளார்.
காளியம்மாள் சமையல் செய்து கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஜல்லி கொட்டப்பட்டு இருந்துள்ளது. தண்ணீர் ஏற்றி வந்த டிராக்டர் ஜல்லியின் மீது ஏறி நிலைகுலைந்து காளியம்மாள், அவரது பாட்டி நிலா மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காளியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த முதியவர் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாட்றாம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமைத்துக் கொண்டிருந்த பெண் மீது டிராக்டர் மோதி பலியான சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.