கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜீஸ்நகர் பகுதியில் சென்னை டூ திருச்சி ஜிஎஸ்டி சாலையின் நடுவே மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது . இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் அந்த வழியே வந்த தனியார் பேருந்தின் பின் பக்கமாக தனியார் சொகுசு பேருந்து மோதியது.
அதன்பின் மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து தனியார் சொகுசு பேருந்து மீது பின்புறமாக மோதியது. இப்படி அடுத்தடுத்து மூன்று பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மினி லாரி அரசு பேருந்து மீது மோதி சாலையின் இடதுபுறத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் மினி லாரி ஓட்டுநர் உட்பட 15க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். பின்னர் காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்சில் வந்திருந்த மருத்துவ குழுவினர் விபத்து நடந்த இடத்திலேயே காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அந்த வழியே வந்த மாற்று பேருந்துகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர்.
மூன்று பேருந்துகள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட நிலையில் மினி லாரியும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அந்த சாலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றது. இதனால் சென்னை திருச்சி ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் சுமார் 200 மீட்டர் தூரத்தைக் கடக்க சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலானது. விபத்து பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் எடைக்கால் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான வாகனங்களைச் சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சரி செய்தனர்.