Skip to main content

காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

Published on 22/09/2018 | Edited on 22/09/2018

அதிமுக ஆட்சிக்கு எதிராக கடந்த 18 ந் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்த போது திமுக அரிமழம் ஒ செ பொன்.ராமலிங்கம் மற்றும் மாவட்ட கலை இலக்கிய அணி து.செ தென்னலூர் பழனியப்பன் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக பேசியதாகவும் அவதூறாக பேசியதாகவும் அதிமுக பிரமுகர் கருப்பையா கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

 

protest

 

இந்த நிலையில் இருவரையும் கைது செய்யக் கோரி காவல்துறையை கண்டித்தும் அவதூறு பேசியதாக கூறப்பட்டுள்ள திமுகவினரை கண்டித்தும்  நேற்று விராலிமலையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பேரணியாக சென்ற போது பழனியப்பனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் தூண்டுதலின் பேரில் அதிமுக வினர் கல்வீசியதாக பங்க் மேளாலர் விராலிமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் இரு தரப்பும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை இருந்து தடுக்கப்பட்டது. அதே நேரத்தில் புதுக்கோட்டை நகரில் ராமலிங்கத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ள கடைகளை அதிமுக ந.செ பாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் அடைத்துள்ளனர். இதனால் அங்கு திமுக தெற்கு மா.செ பொருப்பு ரகுபதி எம்.எல்.ஏ வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மாலையில் திலகர் திடலில் அமைச்சர் ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

 

protest

 

இந்த நிலையில் கொடைக்கானலில் தங்கி இருந்த ஒ செ ராமலிங்கம் கைது செய்யப்பட்டு இரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்த தேர்தலில் போட்டியிட்ட தென்னலூர் பழனியப்பனை கைது செய்யாத போலிசாரை கண்டித்து இலுப்பூரில் திரண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் கைது செய் கைது செய் பழனியப்பனை கைது செய்..! கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் பழனியப்பனை கண்டிக்கிறோம் என்று முழக்கமிட்டனர்.

 

protest

 

இந்த நிலையில் நம்மிடம் பேசிய திமுகவினர்.. எச்.ராஜா இதே புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் காவல் துறைக்கும் நீதிமன்றத்திற்கும் எதிராக தரக்குறைவான வார்த்தைகளில் பேசினார். அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்த போலிசார் பிறகு வழக்கு பதிவு செய்து தனிப்படைகளும் அமைக்கப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.. எச்.ராஜா தாராளமாக பொது இடங்களுக்கு போய் வருகிறார். போலிஸ் பாதுகாப்பும் இருக்கிறது. அதன் பிறகு வேடன்சந்தூரில் அறநிலையத்துறை அதிகாரிகளையும் அவர் வீட்டு பெண்களையும் இழிவாக பேசியதாக புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் எச்.ராஜா மீது பல வழக்குகள் பதிவான நிலையில் எஸ்.வி சேகர் போல சுதந்திரமாக சுற்றிவருகிறார். ஆனால் திமுகவினர் அமைச்சருக்கு எதிராக பேசினார்கள் அதை கேட்கப்போன என்னை கடப்பாறை எடுத்துக் கொண்டு அடிக்க வந்தார்கள் என்று அதிமுக கருப்பையா கொடுத்த புகாரை உண்மையா என்று கூட விசாரிக்காமல் தனிப்படை அமைத்து தேடுவதும் கைது செய்வது நடக்கிறது. 

 

 

காவல் துறை துணையோடு கடைகளும் உடைக்கப்படுகிறது. புதுக்கோட்டை காவல் துறை மீது மக்கள் எப்படி மதிப்பு இருக்கும் என்பதை மக்களே நேரடியாக பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். நிச்சயம் அந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கொடுக்கமாட்டாங்க. நீதிமன்றம் போய் அனுமதி வாங்கி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் அதில் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள அழைப்போம் என்றனர். பாஜக எச் ராஜா வுக்கு ஒரு சட்டம்.. திமுக வினருக்கு ஒரு சட்டமா? என்ற முனுமுப்பு சத்தமாக கேட்கிறது புதுக்கோட்டை மாவட்டத்தில்.

 

சார்ந்த செய்திகள்