Skip to main content

மோடிக்கு நெருக்கமான நிறுவனம் என்பதால் மக்களை குருவி சுடுவது போல் சுட்டுதள்ளியுள்ளனர்: கே.பாலகிருஷ்ணன்

Published on 12/06/2018 | Edited on 12/06/2018
kb


ஸ்டெர்லைட் மோடிக்கு நெருக்கமான நிறுவனம் என்பதால் மக்களை குருவி சுடுவது போல் சுட்டுதள்ளியுள்ளனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரசுப்பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்துவதோடு, அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். சாதியில்லா சமூகத்தை உருவாக்க வேண்டும், சிறுபான்மை மக்களை காத்திடவேண்டும், பெட்ரோலியப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடுவோம் தமிழகமே என்ற முழக்கத்தை முன்னெடுத்து பிரச்சாரப் பயணத்தை தமிழக முழுவதும் மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடலூர் முதுநகரில் திங்கள்கிழமை துவங்கிய பிரச்சாரப் பயணத்தை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கித் துவக்கி வைத்தார். இந்த குழுவில் மாநிலசெயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்டச்செயலாளர் ஆறுமுகம், மாநிலக்குழு மூசா, நாகராஜன், வாலண்டினா, மாதவன், ரமேஷ்பாபு, ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அடங்கிய பிரச்சார பயணம் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கீரப்பாளையம் வழியாக வந்து சிதம்பரத்தில் பொதுகூட்டம் நடைபெற்றது.

 

 

அதில் பேசிய கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி தேர்தலை முன் வைத்து நடத்தும் கட்சியல்ல. மக்களுக்காக போராடும் கட்சி, போராட்டம் மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாகும். அந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசினாலும், போராடுபவர்களைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தி சிறையில் அடைத்தாலும் அதைப் பெருமையோடு ஏற்றுக்கொண்டு மக்களுக்கான போராட்டங்களை தொடர்ந்து நடத்துவோம். தேர்தலுக்கு அப்பால் சமூக நியாயங்களுக்கு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பிரச்சாரத்தை நடத்திவருகிறோம்.

தூத்துகுடியில் நடைபெற்றது போல் வேறு எங்கும் இதுபோன்ற கொடுமை நடந்து இருக்காது. அவர்களுக்கு முதலில் ஆறுதல் கூறியது மார்க்சிஸ்ட் கட்சி தான். ஆட்சியாளர்களுக்கு எங்கு வேண்டுமானாலும், போராட்டம் முற்றுகை நடத்தினாலும் ஏற்றுகொள்வார்கள். ஆனால் வேதாந்தா நிறுவனமான ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினால் அவர்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. அதனால் தான் அப்பாவி மக்களை குருவி சுடுவது போல் சுட்டுதள்ளியுள்ளனர். ஸ்டெர்லைட் மோடிக்கு நெருக்கமான நிறுவனம். மோடியை திருப்திபடுத்தவே உரிமைக்காக போராடிய 13 பேரை சுட்டுகொன்றுள்ளனர். 60-க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களை பாஜக தமிழிசையும், அக்கட்சியின் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணன் சமூக விரோதிகள் என்று கூறுகிறார்கள். ஆலையிடம் கையூட்டு வாங்கியவன் தான் சமூகவிரோதி, உரிமைக்காக போராடியவர்கள் சமூக விரோதிகளா?
  kb


பரங்கிப்பேட்டை முதல் நாகை வரை பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை கொண்டுவரப்போகிறார்கள். உலகத்தில் மக்கள் வாழும் பகுதியில் இதுபோன்ற திட்டங்கள் செயல்படுவதாக எந்த ஆதாரமும் இல்லை. இதை எதிர்த்து மக்கள் போராடினால் இங்கேயும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக தூத்துகுடிபோல் சுட்டுதள்ள முயற்சி எடுப்பார்கள். துப்பாக்கியை கொண்டு அடக்கிவிடலாம் என்பது ஆட்சியாளர்களின் கனவு. ஆதிதிராவிட சமூகத்தை சார்ந்தவர் என்பதால் குடியரசு தலைவரை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காதது தான் சமூக நியாயமா? இது தான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவா? குடியரசு தலைவருக்கே இப்படி என்றால் சாதரண மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும். சாதியும், தமிழும் ஒன்றாக இணையாது, காவி இல்லா இந்தியாவும், சாதிகள் இல்லா தமிழகத்தை உருவாக்கவும் இந்த பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 50ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர் என்று தனது துறையின் மானியக்கோரிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் இந்தியாவில் நேரடி வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர்களைக் கேவலமாக பேசிய எஸ்.வி.சேகரை கைது செய்ய திராணியற்ற இந்த அரசு, தொலைக் காட்சிகள் மீதும், இயக்குநர் அமீர் மீதும் வழக்குப் பதிவு செய்து சம்மன் அனுப்பிஉள்ளது. இந்த அரசை சம்மன் அனுப்பாமலே வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. தொலைக்காட்சியின் நேரடி விவாதத்தில் காவல் துறையின் கண்முன்னே கலவரத்தில் ஈடுபட்டு பிரச்சனை செய்த பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் மீது வழக்குப்பதிவு செய்யாமல் அமைதியாக இருந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. கண்ணிருந்தும் பார்வையில்லாதவர்களாகக் காவல்துறை இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

சார்ந்த செய்திகள்