சட்டமன்றத் தேர்தல் இன்னதேதி என்றுதான் அறிவிக்கவில்லை! அதற்குள் எனக்குத் தான் பதவி வேண்டும், வேட்பாளர் சீட் வேண்டுமென அனைத்துக் கட்சிகளிலும் கலகக் குரல் ஒலிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில், தற்பொழுது தூத்துக்குடியில் எழுந்துள்ள கலகக் குரல் அதிமுக தலைமையை மிரட்டியுள்ளது என்றே கூறலாம்.
அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத கோஷ்டி அரசியல் தூத்துக்குடி மாவட்டத்தில் உண்டு. ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டத்தில், 15-க்கும் அதிகமான தலைமைகள் உண்டு. இதில், ஓபிஎஸ் விசுவாசியான ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் கருணாநிதி உள்ளிட்ட பல தலைமைகள் பிரசித்தம்.!
2019 மார்ச் மாதத்திற்குப் பிறகு, மா.செ-வாக இருந்த சி.த.செல்லப்பாண்டியனை கட்சியின் அமைப்புச் செயலாளராகப் பதவி உயர்த்தி (?!) ஓரங்கட்டி விட்டு, மாவட்டத்தை தெற்கு, வடக்கு என இரண்டாகப் பிரித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு (திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய) செயலாளராக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதனையும், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி மற்றும் விளாத்திக்குளம் உள்ளடக்கிய வடக்கு மாவட்டச் செயலாளராக அமைச்சர் கடம்பூர் ராஜூவையும் நியமித்தது தலைமை. இங்குதான் பிரச்சனையே ஆரம்பித்தது. சி.த.செல்லப்பாண்டியனை ஒதுக்கும் நோக்கில், கட்சியின் எவ்வித நிகழ்விற்கும் அழைக்கவில்லை இரண்டு மா.செ-க்களும்.
இவ்வேளையில், கடந்த 20-12-2020 அன்று, தூத்துக்குடியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் முன்னிலையில், தூத்துக்குடி தெற்கு மா.செ-வும், ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ-வுமான சண்முகநாதன் தலைமையில் தேர்தல் முன்னேற்பாடாய், கழகச் செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தினர். இதில் கலந்துகொள்ள சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை உள்ளிட்டோருக்கு வழக்கம்போல் அழைப்பிதழ் அனுப்பவில்லை.
இதனால், கடுங்கோபமடைந்த சி.த.செல்லப்பாண்டியன் டீம், பொறுத்தது போதும்.! 'பொங்கி எழு மனோகரா!!' என்பதுபோல் தன்னுடைய ஆதரவாளர்களாகவுள்ள, அதிமுக நிர்வாகிகளின், அவசர (முக்கிய) ஆலோசனைக் கூட்டம், ஜனவரி 2-ல் தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில், தன்னுடைய தலைமையில் நடைபெறுவதாக அறிவித்தார். அந்த ஆலோசனைக் கூட்டத்தினை எப்படிச் சிறப்பாக நடத்துவது என செவ்வாய்க்கிழமை (இன்று) மாலை வேளையில், தன்னுடைய சிதம்பரநகர் 4வது தெருவிலுள்ள அமைப்பு கழகச் செயலாளர் அலுவலகத்தில், கூட்டம் நடைபெறும் என அறிவித்தார் சி.த.செல்லப்பாண்டியன்.
எதிர்பார்த்தது போலவே தன்னுடைய ஆதரவாளர்களைத் திரட்டி கூட்டத்தினை துவக்கினார் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன். மாநகரப் பகுதி செயலாளர் முருகன் எடுத்த எடுப்பிலேயே, "வடக்கிலுள்ள ஒட்டப்பிடாரத்தையும், தெற்கிலுள்ள தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து, இரண்டு தொகுதிகளையும் மத்திய மாவட்டமாக்கி, அதனுடைய மா.செ-வாக சி.த.செல்லப்பாண்டியனை நியமிக்க வேண்டும். இலையெனில்?" எனக் குரலெழுப்பி கூட்டத்திற்கான ரகசியத்தை அப்போதே உடைத்தார். கூட்டத்திலுள்ள அனைவரும் அதனை ரசித்தநிலையில் ஏனைய நிர்வாகிகளும் இதே கருத்தை வழிமொழிந்து வருகின்றனர்.
வெற்றி நடைபோடும் தமிழகத்திற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகைதரவுள்ள நிலையில், தூத்துக்குடியில் தலைமைக்கு எதிராகக் கலகக் குரல் எழும்பியுள்ளது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.