திருவாரூர் அருகே ஒ.என்.ஜி.சி (ONGC) நிறுவனத்தின் எரிவாயு சேமிப்பு கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடன், வசித்து வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமம் வெள்ளக்குடி. இந்த கிராமத்தில் 28 குடும்பங்கள் உள்ளன. இவர்களது குடியிருப்புக்கு அருகே ஒ.என்.ஜி.சி (ONGC COMPANY) நிறுவனத்தின் எரிவாயு சேமிப்பு கிடங்கு கடந்த 26 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு கிடங்கில் ஏற்படும் எரிவாயு கசிவால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதே போல் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்தில் அருகில் இருந்த கருவை மரங்கள் எரிந்து கருகின. அதை கண்டு அச்சம்டைந்த அப்பகுதி மக்கள் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்,
இது குறித்து அக்கிராம மக்கள் கூறுகையில், "இரவு நேரங்களில் திறந்து விடப்படும் ஒரு வித வாயுவால் துர்நாற்றம் வீசுவதோடு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஆனந்திடம் மனு அளித்துள்ளோம்" என்றனர்.