
காரைக்குடியில் தாக்குதலுக்கு உள்ளான டாஸ்மாக் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த மூன்றாம் தேதி காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் மதுபானக் கடையில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசப்பட்டது. அதில் டாஸ்மாக் ஊழியர் அர்ஜுனன் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். இதையறிந்த மதுபானக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறந்தவருடைய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் உள்ள 133 மதுபானக் கடைகளை அடைத்து சுமார் 650-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்த ஊழியர் அர்ஜுனனுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் அவருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்; அதேபோல் எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தாக்குதலுக்கு காரணமான ராஜேஷ் என்ற இளைஞரை சம்பவத்தின் இரவே போலீசார் கைது செய்து விட்டனர். ராஜேஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது தந்தை மது அருந்தி அதன் மூலம் பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்த வெறுப்பால் மதுபானக் கடையை அடித்து நொறுக்க ஏற்பாடு செய்ததோடு மண்ணெண்ணெய் குண்டு வீசியதாகவும், மதுபானத்திற்கு அதிகமாக காசு வைத்து விற்பதும் மதுபானத்தால் பல குடும்பங்கள் சீரழிவதையும் பொறுக்க முடியாமல் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.