அரசு மருத்துவர் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைகொடுத்து வந்ததாக டாக்டர்மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்ட டாக்டர்.மணவழகன். உள்ளிக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றிவருகிறார். 55 வயதான இவரை மருத்துவமனை வட்டாரத்தினர் மன்மதடாக்டர் என்றே அழைக்கின்றனர்.இவர் தமிழ்நாடு மருத்துவஅலுவலர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் டாக்டர் மணவழகன் மீது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் நிரந்தர செவிலியர்களும் தற்காலிகமாக பணிபுரியும் செவிலியர்களும் என 7 க்கும் மேற்பட்டோர் கடந்தமாதம் திருவாரூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனரான ஸ்டான்லே மைக்கேலிடம் புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘’டாக்டர் மணவழகன் தங்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசுவதாகவும், அனுமதி இன்றி உடம்பில் கண்ட இடங்களில் தொடுவதாகவும், சிலநேரம் செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடிப்பதாகவும், ஆபாசமாக பேசுவதாகவும்’’ கூறி இருந்தனர்.
புகாரை வாங்கிய துணைஇயக்குனர் டாக்டர் ஸ்டான்லேமைக்கேல், டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் 3 டாக்டர்கள் கொண்ட விசாரணை கமிட்டி அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த விசாரணையின் முடிவில், டாக்டர் மணவழகனை உள்ளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி அருகில் உள்ள தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
பணியிடமாற்றத்தோடு அமைதியான இவ்விவகாரம் மீண்டும் விஸ்ரூபம் எடுத்துள்ளது. 3 ம்தேதி மாலை, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ஸ்டேன்லி மைக்கேல் தலைமையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், ஏழு தற்காலிக செவிலியர்கள் திருவாரூர் மாவட்ட எஸ்பி துரையிடம்,’’ டாக்டர் மாணவர்கள் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக ’’ மீண்டும் புகார் அளித்தனர். புகாரை வாங்கிய எஸ்பி துரை உரிய விசாரணை நடத்தும்படி, மன்னார்குடி டி,எஸ்,பி,யான கார்த்தியிடம் அனுப்பினார். டி,எஸ்,பியோ அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தார்.
மன்னார்குடியில் உள்ள அனைத்து மகளீர் காவல்நிலயத்திற்கு மாவட்ட துணை இயக்குனர் ஸ்டான்லே மைக்கேல் தலைமையில் அரசுக்கு சொந்தமான வாகனம் மற்றும் தனியார் கார்களில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்கள் வந்தனர். புகாரின்படி இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் விசாரணை மேற்கொண்டு, டாக்டர் மணவழகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே டாக்டர் மணவழகனுக்கு ஆதரவான டாக்டர்கள் சுமார் 10க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்திற்கு வந்துபுகார் குறித்து ஸ்டான்லேமைக்கேலிடம் கேட்டறிந்தனர். அதோடு,துறைரீதியாக ஏற்கனவே நடவடிக்கை எடுத்தாகிவிட்டது, வேண்டுமானால் மீண்டும் முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கோரிக்கைவிடுத்தனர். அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்க ஸ்டான்லே மைக்கேல் மறுத்துவிட்டதால் அங்கு திரண்டிருந்த டாக்டர்கள் மணவழகனுக்கு வேண்டாதவர்களால் முன்விரோதம் காரணமாக பழிவாங்கப்படுகிறார் என்றும் பழிவாங்கவே புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூச்சலிட்டனர். அதோடு பெண்கள் புகார்கொடுக்க காவல் நிலையத்திற்கு வரும்போது ஸ்டான்லே மைக்கேலுக்கு என்னவேலை என மீண்டும் கூச்சலிட்டனர்.
இதுறித்து பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஏழு பெண்களில் ஒருவரிடம் விசாரித்தோம், ‘’ அவரு டாக்டரே இல்லங்க, அப்பா வயசுக்கு இருக்காரு, எங்களை மகளா பார்க்காம, காமக்கண்ணோட்டத்துடனே பார்ப்பது, பேசுவது, தொல்லை கொடுப்பதுமா இருக்கிறார். எந்த நேரம் அவரது போன் வரும்னு பயந்து நடுங்கிய போயிருக்கேன். எந்த பயமும் இல்லாம கூச்சமே இல்லாம அறுவெறுக்க தக்கவகையில் நடந்துக்குவார், வேலை நேரத்தில் மட்டுமில்லங்க, மிட்நைட்லயும் போண் போட்டு தொல்லை குடுப்பார், வேலையே வேனாம்னாலும், குடும்பம் ஓடனுமே என்று தான் தினசரி காலத்த கழிக்கிறோம்,’’ என்கிறார் கண்ணீர் மல்க.
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களிடம் டாக்டர் மணவழகன் கூறுகையில்’’, நான் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக இருப்பதால் டாக்டர்களின் நன்மைக்காக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். ஸ்டான்லே மைக்கேலை கடுமையாக எதிர்த்துள்ளேன் எனக்கும் ஸ்டான்லேவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது அதன் காரணமாக என்னை பழிவாங்க தற்காலிக நர்ஸ்களை தூண்டிவிட்டு புகார் கொடுத்துள்ளார். என் மீது எந்த தவறும் இல்லை பொய்யாக கொடுக்கப்பட்ட வழக்கை சட்ட ரீதியாக சந்திப்பேன்.’’ என்கிறார் கராராக.