
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ளது பா.கொத்தனூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயது கொளஞ்சி. இவர் அதிமுகவில் மாவட்ட அளவில் கட்சிப் பொறுப்பில் உள்ளார். அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர் இவரது மனைவி மகேஸ்வரி(55). இவர்களது மகள் கல்பனா(21) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு கொத்தனூரில் உள்ள தங்களது வீட்டின் உள்பகுதியில் உள்ள வராண்டாவில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவு சுமார் ஒரு மணியளவில் வீட்டிற்குள் புகுந்த 2 மர்ம நபர்கள் மகேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் தாலிக்கொடியைப் பறித்துள்ளனர். இதனால் திடுக்கிட்டு கண் விழித்த மகேஸ்வரி திருடனைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததோடு 'திருடன்' 'திருடன்' என்று சத்தம் போட்டு கத்தியுள்ளார். அவர் கத்திய சத்தம் கேட்டு எழுந்த கொளஞ்சி திருடர்களை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது திருடர்கள் தாங்கள் வைத்திருந்த மரக் கட்டையால் கொளஞ்சியின் தலையில் தாக்கி விட்டு மகேஸ்வரி கழுத்தில் இருந்த தாலிக்கொடியை எடுத்துக்கொண்டு தப்பி விட்டனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் படு காயமடைந்த கொளஞ்சியை வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த திட்டக்குடி டி.எஸ்.பி வெங்கடேசன், வேப்பூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெய கீர்த்தி ஆகியோர் விரைந்து சென்று சம்பவம் நடந்த இடத்தில், விசாரணை நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இரவு நேர கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இரவு நேர கொள்ளையர்களின் அட்டகாசம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் சில நாட்களாக அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.