தமிழக அரசின் சார்பில் அம்பேத்கர், பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சார்பில் பொங்கல் சமயத்தில் ஆண்டுதோறும் அம்பேத்கர் மற்றும் பெரியார் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துருவுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு கிட்டத்தட்ட 90 ஆயிரம் வழக்குகளில் நீதி வழங்கியவர். பெண்கள் கோவில்களில் பூசாரிகள் ஆகலாம், சாதி மதம் இன்றி எல்லோருக்கும் ஒரே சுடுகாடு, தாழ்த்தப்பட்டோருக்கு கோவிலில் வழிபாட்டு உரிமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சமூக நீதியை நிலைநாட்டியவர். அண்மையில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜெய் பீம்' என்ற திரைப்படம் இவர் வழக்கறிஞராக இருந்தபொழுது எடுத்துக்கொண்ட வழக்கு ஒன்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. அதேபோல் திராவிட இயக்க ஆய்வாளரும், எழுத்தாளருமான க.திருநாவுக்கரசுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதாளர்களுக்கு பரிசுத்தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருது தொகை, தங்கப்பதக்கம், தகுதி உரையுடன் திருவள்ளுவர் தினத்தன்று விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அவர்களது மக்கள் பணியையும், அதற்கான அங்கீகாரமாக கிடைத்துள்ள இந்த விருதையும் நக்கீரன் போற்றுகிறது; அவர்களை வாழ்த்துகிறது.